Enable Javscript for better performance
சாரல் மழை: முந்திரி விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கோடை வெப்பத்தால் முந்திரிப் பூக்கள் கருகி வந்ததால் கவலை அடைந்த விவசாயிகள், இரு நாள்களாக பெய்து வரும் லேசான சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் 28,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் முந்திரிக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் இருந்து ஆண்டுதோறும் 22,168 மெட்ரிக் டன் முந்திரிக் கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதை அடிப்படையாகக் கொண்டு பண்ருட்டி பகுதியில் பல்வேறு முந்திரி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், முந்திரிக் கொட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது.

    மேலும், முந்திரி சார்பு தொழில் மூலம் (முந்திரி எண்ணெய், புண்ணாக்கு) பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் கிராமப் பகுதியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புப் பெற்று வருவதுடன், இப்பகுதி பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது.

    ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே வெயில், கனமழை, புயல், கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால், முந்திரி விவசாயிகள் சோதனைகளை அனுபவித்து வருகின்றனர்.

    இருப்பினும் பாதகம் இல்லாத அளவுக்கு மகசூல் கிடைத்ததால் இவர்களின் வாழ்வாதாரம் திருப்திகரமாக இருந்து வருகிறது. முந்திரி மற்றும் பலா ஆகியவகளை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயையே முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டு முந்திரி மரங்கள் பூவும், பிஞ்சுமாக காட்சி அளிப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்தது. ஆனால் வெயிலின் தாக்கத்தால் பூக்கள் கருகியும், பிஞ்சுகள் வதங்கியும் காணப்பட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர். இதனிடையே கடந்த 2 நாள்களாக லேசான மழை ஆங்காங்கே பெய்து வருவது முந்திரி விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து, முந்திரி விவசாயிகளான காடாம்புலியூர் சரவணன், முத்தாண்டிக்குப்பம் தனசேகரன் ஆகியோர் கூறியதாவது, சாரல் மழை மகிழ்ச்சியைத் தந்தாலும், இதனால் எந்தப் பயனும் இல்லை. இப்போதைய சூழ்நிலையில் பூமியில் தண்ணீர் நிற்கும் அளவுக்கு நல்ல மழை பெய்தால் மட்டுமே முந்திரி, பலா மகசூல் அமோகமாக இருக்கும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai