Enable Javscript for better performance
மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வேண்டும்

    By கடலூர்  |   Published on : 17th April 2015 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதி வரை 45 நாள்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் விசைப்படகு, பைபர் படகு, வள்ளம் ஆகியவை மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

    இதனால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து மீனவ கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூர் மீன்பிடி துறைமுகத்திலுள்ள மாவட்ட மீன் வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தேவனாம்பட்டினம் மீனவ கிராமத் தலைவர் தி.கருணாநிதி தலைமை வகித்தார்.

    இதில் சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், சிங்காரத்தோப்பு, ராசாபேட்டை, சித்திரைப்பேட்டை, தைக்கால்தோணித்துறை, தாழங்குடா மற்றும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த நல்லவாடு, பனித்திட்டு, மூர்த்திக்குப்பம், நரம்பை உள்பட 25 மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மீன்பிடி தடைக்காலத்தில் கட்டுமரங்களில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் மீனவர்கள் மத்தி மீன்களை பிடிக்கக் கூடாது.

    சின்ன படகுகளில் பெரிய படகுகளில் பயன்படுத்தும் தரைவலை, சுத்து வலைகளை பயன்படுத்தக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த முடிவை கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளைச் சேர்ந்த 64 மீனவ கிராமங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    மேலும், தற்போது மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரமாக வழங்கப்படுகிறது.

    இத்தொகையை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். அல்லது, மீனவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், குடும்ப அட்டையில் பெண்களை குடும்பத்தலைவராக காட்டப்பட்டுள்ளவர்களுக்கு இத்தொகை வழங்க மறுக்கப்படுவதை கண்டிப்பதோடு, அவர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai