Enable Javscript for better performance
எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா ஜி.கே.வாசன்? - Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட தமாகா உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை (ஜன.28) கடலூருக்கு வரும் ஜி.கே.வாசனை நோக்கி கட்சியினர் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
     முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற கட்சியை துவங்கினார்.
     இவரது கட்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஏராளமானவர்கள் இணைந்தனர்.
     அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் ஆதரவு அதிகமாக தங்களுக்கே உள்ளதென தமாகாவினரும், காங்கிரஸாரும் கூறி வருகின்றனர்.
     கடந்த டிச.16-ம் தேதி கடலூருக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பயணம் அதற்கு முந்தைய நாள் கட்சியினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் ரத்து செய்யப்பட்டது.
     இந்நிலையில், ஜி.கே.வாசனின் வருகையையும், அவரது கூட்டத்துக்கு வருகை தரும் தொண்டர்களின் எண்ணிக்கையையும் காங்கிரஸ் கட்சியினர் உள்பட மற்ற கட்சியினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
     கோஷ்டி மோதலுக்கு இடையேயும் பலமாக செயல்படும் காங்கிரசை எதிர்த்து கடலூர் மாவட்டத்தில் தமாகாவை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஜி.கே.வாசனுக்கு உள்ளது. அதற்கேற்றார்போல் மாவட்ட நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டியுள்ளது. அதற்கு தற்போது கடும் போட்டி நிலவுவதால் கோஷ்டி உருவாகாமல் தடுக்க வேண்டிய நிலையும் அவருக்கு உள்ளது.
     இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஜி.கே.வாசனின் முதல் கடலூர் பயணம் அமைந்திருக்கிறது. இந்தப் பயணத்தை அவர் எவ்வாறு முடிக்கிறார் என்பதைப் பொறுத்தே கட்சியின் எதிர்காலமும் அடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai