Enable Javscript for better performance
நிலக்கரியை வெட்டி எடுப்பதில் மேம்பட்ட தொழில்நுட்பம் அவசியம்:  என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன்- Dinamani

சுடச்சுட

    

    நிலக்கரியை வெட்டி எடுப்பதில் மேம்பட்ட தொழில்நுட்பம் அவசியம்:  என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன்

    By  கடலூர்,  |   Published on : 28th January 2015 12:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலக்கரியை வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களில், புதிய தொழில்நுட்பங்களை பொறியாளர்கள் மேம்படுத்த வேண்டும் என என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன் கேட்டுக் கொண்டார்.
     நெய்வேலி சுரங்கங்களில் சிறப்பு சுரங்க இயந்திரங்களைப் பணியில் ஈடுபடுத்திப் பெற்ற வெற்றிகரமான அனுபவங்கள் என்ற கருத்தில் ஒரு நாள் பயிலரங்கம் நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இந்திய பொறியாளர் சங்கத்தின் நெய்வேலி மையம் மற்றும் அந்த அமைப்பின் இயந்திரப் பொறியியல் வாரியம், என்.எல்.சி. சார்பில், இந்திய பொறியாளர் கழகக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன் தொடங்கிவைத்துப் பேசினார்.
     அப்போது அவர் கூறியது: ஜெர்மன் நாட்டின் திறந்த வெளிச் சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பக்கட் வீல் எக்ஸவேட்டர், ஸ்பிரடர் போன்ற சிறப்பு சுரங்க இயந்திர தொழில்நுட்பத்தை நெய்வேலியில் அறிமுகப்படுத்திய போது, தொடக்க நிலையில் ஏராளமான இடர்ப்பாடுகள் ஏற்பட்டன.
     பின்னர், நெய்வேலி மேல் மண்ணின் கடினத் தன்மைக்கு ஏற்ப, அந்த இயந்திரங்களின் பற்கள் மற்றும் இதர பாகங்களை என்.எல்.சி. பொறியாளர்கள் மாற்றியமைத்ததன் விளைவாக, தற்போது என்.எல்.சி. ஒரு சிறந்த பொதுத்துறை நிறுவனமாகத்
     திகழ்கிறது. மேலும், சிறப்பு சுரங்க இயந்திரங்கள் ஒரு லட்சம் மணி நேரம் இயங்கியபின் அதன் ஆயுளை அதிகரிக்கும் செயல்முறையை என்.எல்.சி. பொறியாளர்கள் வடிவமைத்து, அதன்மூலம் மேலும் 15 ஆண்டுகள் அந்த இயந்திரங்களை சிறப்பாக இயங்க வைக்கின்றனர்.
     நிலக்கரி உற்பத்தியை ஆண்டுக்கு 100 கோடி டன்னாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதிவிரைவில் சுரங்கம் வெட்டுவதற்கு, நிலக்கரிச் சுரங்கங்களிலும், சிறப்பு சுரங்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
     என்.எல்.சி. நிறுவனத்தின் முன்னாள் சுரங்கத் துறை இயக்குநர் ஏ.கே.சுப்பிரமணியன், அமெரிக்காவில் சிறப்புச் சுரங்க இயந்திரங்கள் துறை செயல்பாடு குறித்துப் பேசினார்.
     சிறப்பு விருதுகள்: நிகழ்ச்சியில், என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன், சுரங்கத் துறை முன்னாள் இயக்குநர் ஏ.கே. சுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் பி.கே.சகாதேவன், சண்முகம், தலைமைப் பொதுமேலாளர்கள் கோபால்சாமி, அழகர், ஸ்ரீதரன், பொதுமேலாளர் ஜீவானந்தம், மின்துறை இயக்குநர் எஸ்.ராஜகோபால், செயல் இயக்குநர் என். இளம்பருதி ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
     தொடர்ந்து, புதன்கிழமை (ஜன.28) நடக்கும் பயிலரங்கின் இரு அமர்வுகளிலும் சமர்ப்பிக்கப்படவுள்ள 10 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய குறுந்தகடை என்.எல்.சி. தலைவர் வெளியிட்டார்.
     பயிலரங்கில் என்.எல்.சி. மனிதவளத் துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சார்யா மற்றும் செயல் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக இயந்திரவியல் மற்றும் கட்டுமானப் பொறியியல் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் சுமார் 128 பேர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai