Enable Javscript for better performance
ரூ.1 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம்: தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம்: தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு உத்தரவு

    By கடலூர்  |   Published on : 15th April 2016 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூ.1 லட்சத்துக்கு மேல் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென வங்கிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    சட்டப் பேரவைத் தேர்தலில் வங்கி மேலாளர்கள் மற்றும் மத்திய வருமான வரித்துறை அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் பணப் பரிவர்த்தனை அதிகமாக உள்ள இடத்தில் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி வங்கிகளில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் அது தொடர்பான தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வங்கி நிர்வாகத்தினர் தெரிவிக்க வேண்டும்.

    வாடிக்கையாளர்களின் கணக்கில், தொடர்ந்து நிறைய பரிமாற்றங்கள் செய்திருந்தால் அந்த கணக்காளரை கண்காணிக்க வேண்டும். ஒருசில தவறுகள் நடக்கும் போது அதற்கு ஆதாரம் தேவைப்படுவதால் இது போன்ற நடவடிக்கைகள் வங்கியாளர்கள் கண்காணிப்பது அவசியம்.

    தங்கள் வங்கிகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பரிமாற்றம் நடந்திருந்தால் அது தொடர்பான தகவல்களை வருமானவரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

     ரயில் நிலையம், உணவகம், வட்டிக்கடை போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறதா எனவும், வேட்பாளர்கள் வங்கிக் கணக்கு, ஏதேனும் பொருள்களுக்கு மொத்தமாக பணம் செலுத்திருந்தாலோ அதனையும் கண்காணிக்க வேண்டும். பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை மத்திய கட்டுப்பாட்டு அறை எண் 1800 425 6669-க்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, வருமான வரித்துறை அலுவலர் வி.சுப்பிரமணியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோ.ஷர்மிளா, முன்னோடி வங்கி மேலாளர் ஆண்ட்ருஸ் அய்யாசாமி, தேர்தல் வட்டாட்சியர் ப.காந்தி மற்றும் 32 வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai