சுடச்சுட

  

  "நடா' புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்: ஆட்சியர் ராஜேஷ் தகவல்

  By DIN  |   Published on : 01st December 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "நடா'  புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.
    வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக மாறி கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
   இதையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.  பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: நடா புயல் கடலூரில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   புயலால் கடலோரங்களில் உள்ள 49 கிராமங்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 29 புயல் பாதுக்காப்பு மையங்கள், 14 பல்நோக்கு தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளன.  தீயணைப்பு, காவல்துறை, மீன்வளத் துறையை சேர்ந்த 30 மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 26 மருத்துவக் குழுக்கள், ஆரம்ப சுகாதார மையங்களும், அங்கு மருத்துவர்கள், மருந்துகள், ஜெனரேட்டர் வசதிகள் தயார் நிலையில் உள்ளன. வருவாய் நிர்வாக ஆணையர் தேசிய பேரிடர் மேலாண்மையிலிருந்து 80 பேரை மாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார். மேலூம், தமிழக பேரிடர் மீட்புப் படைக் குழுவினர் 40 பேர் வரவுள்ளனர். 50 படகுகள், 100 மின் அறுப்பான்கள் உள்ளன.
  3000 மின் கம்பங்கள், 1000 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 830 மெட்ரிக் டன் அரிசி இருப்பு உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்களை தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்ல உள்ளோம்.   மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077, 04141-220700, 04142-231666 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.    புயலை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.  கூட்டத்தில் சார்-ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai