சுடச்சுட

    

    கடலூர் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

    By DIN  |   Published on : 02nd December 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் துறைமுகத்தில் வியாழக்கிழமை 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு, பின்னர் 3ஆம் எண்ணாக மாற்றப்பட்டது.
    இதுகுறித்து கடலூர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட விவரம்:
    தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள நடா புயலானது புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை (டிச.2) அதிகாலை வேதாரண்யத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே, அதாவது கடலூருக்கு தெற்கே பரங்கிப்பேட்டை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இப் புயல் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறும்.
    7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு: இதையொட்டி, கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டானது, வியாழக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டாக உயர்த்தப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது.
    இந்த எச்சரிக்கைக் கூண்டானது துறைமுகத்தின் அருகாமையில் புயல் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கும் அபாய எச்சரிக்கை எனத் தெரிவிக்கப்பட்டது.
    புயல் கரையைக் கடக்கும்போது 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அவ்வப்போது பலத்த மழை பெய்யும். கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதுடன் 3 மீட்டர் உயரத்துக்கு எழும் என தெரிவிக்கப்பட்டது.
    3ஆம் எண் கூண்டாக மாற்றம்: இந்த நிலையில், புயலின் தீவிரம் குறைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதைத் தொடர்ந்து 7ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு மாலை 6.30 மணிக்கு 3ஆம் எண் கூண்டாக மாற்றப்பட்டது. காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளதை இதுகுறிக்கும். இதனால், கடுமையான பாதிப்பிலிருந்து கடலூர் துறைமுகம் மீண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai