சுடச்சுட

  

  தயார் நிலையில் புயல் பாதுகாப்பு மையங்கள்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் தகவல்

  By DIN  |   Published on : 02nd December 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடா புயலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
  நடா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மைத் துறை செயலருமான ககன்தீப்சிங் பேடி தலைமையில், மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ககன்தீப்சிங் பேடி பேசியது: நடா புயலை முன்னிட்டு மின்சாரத் துறையின் 2 தலைமைப் பொறியாளர்கள் தலைமையில் வெவ்வேறு துணை மின் நிலையங்களில் 2,000 பணியாளர்கள், 3,000 மின்கம்பங்கள், 100 கி.மீ. நீளத்துக்கான கம்பிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
  புயலின்போது நெடுஞ்சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்து சீராக நடைபெற தேவையான அளவு மின்அறுப்பான், பொக்லைன் இயந்திரம், மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
  பொது சுகாதாரத் துறையின் மூலம் 26 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தலைமை மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவர்களும், மருந்துகளும், ஜெனரேட்டர் வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
  மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு தங்குமிடங்களும் உள்ளன.
  இங்கு போதுமான அளவுக்கு உணவு, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை கையிருப்பில் உள்ளன. கடலோர மாவட்டங்கள் அல்லாமல் விசூர், கல்குணம், கரிவெட்டி போன்ற பகுதிகளும் கன மழையால் பாதிக்கப்படும் என்பதால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  பொதுப்பணித் துறை அலுவலர்கள், நீர்நிலைகளில் தண்ணீர் வெளியேறும் அளவுகளை கண்காணித்து தேவையான அளவு மணல்மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை தயார் நிலையில் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்திலிருந்து தண்ணீர் வெளியேறுவதை கண்காணிக்க பொதுப்பணித் துறையிலிருந்து ஒரு பொறுப்பு அலுவரை நியமிக்கவும், முகத்துவாரங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
  கூட்டத்தில் விழுப்புரம் கோட்ட காவல் துறை தலைவர் (ஊர்காவல் படை மற்றும் கலால்) பெரியய்யா, மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார், சார் ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குநர் ச.சா.குமார் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai