சுடச்சுட

  

  சம்பா பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்காக, பிரதம மந்திரி பசல் பீம யோஜனா என்ற புதிய பயிர்க் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, விவசாயிகள் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.369 மட்டும் பிரீமியம் தொகையாக செலுத்தி இத்திட்டத்தில் தற்போது இணைந்து வருகின்றனர்.
  இதற்கான பிரீமியத் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் கடன்பெறும்போது பிடித்தம் செய்யப்படுகிறது. வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய, பயிர் சாகுபடி செய்தமைக்கான உரிய ஆவணங்களுடன் பிரீமியம் தொகையினை ரொக்கமாக வங்கிகள் மூலம் ஐசிஐசிஐ லம்பார்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்த வேண்டும். நடப்பு சம்பா பருவ நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவ.30ஆக இருந்தது.
  தற்போது தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய டிச.5ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் உரிய நடவடிக்கைக்காக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  எனவே, இதுவரை தங்களுடைய நெற்பயிரினை பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வங்கிகளில் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai