சுடச்சுட

  

  வங்கிகளில் போதிய பணம் இருப்பில் இல்லாததால் ஊதியதாரர்கள், ஓய்வூதியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
  மத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8ஆம் தேதி இரவு அறிவித்தது. பொதுமக்கள் தங்கள் கையில்வைத்திருக்கும் உயர்மதிப்பு கொண்ட பணத்தை வங்கிகளில் டிச.30ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் வங்கியிலிருந்து பணம் எடுப்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
  ஏற்கெனவே புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மட்டுமே பொதுமக்கள் வங்கியில் செலுத்தியதால், வங்கியால் பொதுமக்களுக்குத் தேவையான ரூ.100, ரூ.50 நோட்டுக்களை போதிய அளவில் வழங்க முடியவில்லை.
  இந்த நிலையில் டிச.1ஆம் தேதியையொட்டி தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கியுள்ளன. இந்த சம்பளம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் மூலமாக மட்டுமே வழங்கப்படுவதால், சம்பளதாரர்கள் அதனை பெறுவதற்காக வியாழக்கிழமை வங்கிகளில் குவிந்தனர். ஆனால், வங்கிகளில் போதுமான அளவுக்கு பணம் கையிருப்பில் இல்லாத காரணத்தால் புதன்கிழமை ரூ.10 ஆயிரமாக வழங்கப்பட்ட சம்பளப் பணம், வியாழக்கிழமை ரூ.5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்தும் குறைவான பணத்தையே அவர்களால் பெற்றுச் செல்ல முடிந்தது.
  இதுகுறித்து வங்கித் துறை அலுவலர்கள் தெரிவிக்கையில், கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தினர் என சுமார் ஒரு லட்சம் பேர் வங்கிகள் மூலமாக சம்பளம், ஓய்வூதியம் பெறுகிறார்கள். அவர்களுக்கான ஊதியம் வழங்க ரூ.150 கோடி தேவைப்படுகிறது. ஆனால், வங்கிகளுக்கு அவ்வளவு பணம் வழங்கப்படுவதில்லை. 69 வங்கிக் கிளைகள் கொண்ட வங்கிக்கு கடந்த 29ஆம் தேதி ரூ.20 கோடியும், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினத்தில் 89 கிளைகள் கொண்ட மற்றொரு வங்கிக்கு ரூ.10 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்பிஐ வங்கிக்கு கூடுதலான தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய ரூ.500 நோட்டு இதுவரை கடலூர் மாவட்டத்தில் எந்த வங்கியின் ஏடிஎம்களிலும் வழங்கப்படவில்லை என்றனர்.
  எனவே, இப்பிரச்னையை போக்க அதிகப்படியான பணத்தை ரிசர்வ் வங்கி கடலூருக்கு அனுப்பி வைப்பதோடு, சில்லறைத் தட்டுப்பாட்டினை நீக்க ரூ.500 நோட்டுகளையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai