சுடச்சுட

  

  புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு

  By DIN  |   Published on : 02nd December 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடல் பகுதியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
  நடா புயல் வேதாரண்யத்துக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இந்த ஆய்வுப்பணி நடைபெற்றது. வேளாண்மைத் துறை அரசு செயலரும், கடலூர் மாவட்ட பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரியுமான ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் ஆகியோரும் அமைச்சருடன் ஆய்வு செய்தனர்.
  அப்போது, தேசிய பேரிடர் மீட்புக் குழு சென்னை ஆய்வாளர் சுந்தரேசன், ககன்தீப் சிங்பேடி ஆகியோர் மீனவர்களிடம் பேசியது: நடா புயல் வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  அதனால் கடலூர் மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும். கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். படகுகளை பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
  மேலும் ககன்தீப் சிங்பேடி கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதி, தாற்காலிக தங்குமிட வசதிகள் மற்றும் உணவு, குடிநீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. அதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
  பின்னர், அமைச்சர் எம்.சி.சம்பத், அரசு செயலர் ககன்தீப்சிங்பேடி, ஆட்சியர் ராஜேஷ் ஆகியோர் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அன்னங்கோயில், முழுக்குத் துறை, எம்ஜிஆர் திட்டு, தா.சோ.பேட்டை போன்ற கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் புதுப்பேட்டையில் புயல் பாதுகாப்பு மையத்தில் தயாரிக்கப்படும் உணவையும் பரிசோதனை செய்தனர்.
  ஆய்வின்போது, சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட திட்ட அதிகாரி குமார், மீன்வளத் துறை துணை இயக்குநர் கார்த்திகேயன், கோட்டாசியர் பி.எஸ்.விஜயலெட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai