சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தை டிசம்பர் மாத இயற்கைச் சீற்றங்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றன.
  வங்கக் கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், இயற்கைச் சீற்றத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக உள்ளது. மேலும், கெடிலம், பெண்ணையாறு, கொள்ளிடம், வெள்ளாறு, பரவனாறு ஆகிய 5 ஆறுகள் கடலில் கலக்கும் இடமாகவும் உள்ளது.
  இதனால் அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் இந்த மாவட்டம், கடற்கரையோரம் அமைந்துள்ளதால் புயல் பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாதங்களில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் கடலூர் மாவட்டத்தை அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
  கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலை எனும் சுனாமி, மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களை சூறையாடியது.
  இதில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 50-க்கும் மேலாக உள்ளது.
  அடுத்ததாக 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய தானே புயல், கடலூரை புரட்டிப் போட்டது.
  கோடிக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையெங்கும் மரங்களும், வீடுகளின் மேற்கூரைகளும் சிதறிக் கிடந்தன. கடற்கரையோர கிராமங்களில் மின் கம்பங்களும் சேதமடைந்தன. இந்த பாதிப்புகளை சரிசெய்வதற்கு ஒரு மாதத்துக்கு மேலானதோடு, விவசாயிகள் இதுவரை மீளவில்லை.
  இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாவட்டத்தில் பெய்த கனமழையானது வெள்ளமாக மாறி குடியிருப்புகளுக்குள் புகுந்ததில் பல கிராமங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
  ஏராளமானோர் உயிரிழந்ததோடு, 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
  கால்நடைகள் இழப்பு, பயிர் இழப்பு, வீடுகள் சேதம் ஆகியவற்றிலிருந்து விவசாயிகள், பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இதுவரை மீளவில்லை.
  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையும், இழப்பீட்டுத் தொகையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
  இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையை நவம்பர் மாத தொடக்கத்திலேயே எதிர்பார்த்திருந்த மாவட்ட நிர்வாகம் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டது.
  ஆனால் அப்போது மழை பெய்யாமல் பொய்த்ததோடு, தற்போது டிசம்பரில் நடா புயலுடன் பெய்யத் தொடங்கியுள்ளது.
  எனினும், மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai