சுடச்சுட

    

    நடா புயல் கடந்தும் கடல் சீற்றம் தணியவில்லை: 3ஆவது நாளாக மீன்பிடித் தொழில் பாதிப்பு

    By DIN  |   Published on : 03rd December 2016 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடா புயல் கரையைக் கடந்தும் மாவட்டத்தில் கடல் சீற்றம் குறையாததால் மீனவர்கள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
    வங்கக் கடலில் உருவான நடா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயலானது வீரியம் குறைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி காரைக்கால் அருகே கரையைக் கடந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லை.
    புயல் அறிவிப்பையொட்டி மீனவர்கள் புதன்கிழமையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் செல்வதை தவிர்த்தனர். ஏற்கெனவே மீன்பிடி பணியில் இருந்த பலர் உடனடியாக கரைக்குத் திரும்பினர். புயல் கடந்தபோதும் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கமான அளவைவிட கூடுதலாக 3 அடி உயரம் வரை அலைகள் எழும்பின. இதனால் மீனவர்கள் 3ஆவது நாளாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. சுமார் 3 ஆயிரம் விசைப் படகுகள், பைபர் படகுகள், கட்டுமரங்கள் கடற்கரையோரம் மற்றும் ஆற்றின் முகத்துவாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
    இந்த படகுகளை மீனவர்கள் சரிபார்த்து மீண்டும் கட்டி வைத்தனர். கடற்கரையோரம் அமர்ந்து வலைகளின் பழுதுகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்க மீண்டும் கடலுக்குள் செல்ல இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai