சுடச்சுட

    

    பயிர்களில் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும்: அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர்

    By DIN  |   Published on : 04th December 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர்களில் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த  புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்  என துணைவேந்தர் செ.மணியன் கேட்டுக்கொண்டார்.
    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல பூச்சியியல் துறையில் மேம்படுத்தப்பட்ட பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில், விவசாயிகளுக்கான பயிற்சித் திட்ட தொடக்க விழா மற்றும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.  
    பூச்சியியல் துறைத் தலைவர் வெ.செல்வநாராயணன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் விழாவில் பங்கேற்று பயிற்சி மற்றும் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், தற்போதைய பருவ நிலை மாற்றங்களால் பூச்சிகளின் தாக்குதல் வேளாண் பயிர்களை அதிகம் பாதிக்கிறது. அவற்றினைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும். இப்பயிற்சியின் மூலம் விவசாயிகள் பூச்சி மேலாண்மைத் திறனை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியை பன்மடங்கு உயர்த்த வேண்டும் என துணை வேந்தர் கேட்டுக் கொண்டார்.
    பரங்கிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் ஆற்றிய சிறப்புரையில், வேளாண் சுற்றுச்சூழல் ஆய்வின் முக்கியத்துவம், விவசாயத்தில் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் அவசியம் குறித்து விளக்கினார்.
    விழாவுக்கு தலைமை வகித்த வேளாண் புல முதல்வர் மு.ரவிச்சந்திரன் பேசுகையில், ஆராய்ச்சிக் கூடங்களில் கண்டுபிடிக்கப்படும் மேம்படுத்தப்பட்ட பூச்சி மேலாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கொண்டுசேர்ப்பது ஆராய்ச்சியாளர்களின் கடமை என வலியுறுத்தினார்.
    பயிற்சி இயக்குநர் ரா.கண்ணன் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினார். முடிவில் உதவி இயக்குநர் அ.மே.அமலஹயஸிந்த் நன்றி கூறினார்.
    விழாவில் பூச்சியியல் துறை முன்னாள் தலைவர்கள், வேளாண் புல துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் குமராட்சி வட்டத்தைச் சார்ந்த கீழகுண்டலபாடி, மேலகுண்டலபாடி, பெராம்பட்டு கிராம விவசாயிகள் 52 பேர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai