சுடச்சுட

  

  வங்கிகளில் பணம் எடுப்பதற்காக மாத சம்பளம் பெறுவோர், ஓய்வூதியதாரர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ரூபாய் தட்டுப்பாட்டு பிரச்னை தொடர்வதால் வங்கி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
  மத்திய அரசு கருப்புப் பணத்துக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கையால், பணத் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக தற்போது மாத ஊதியதாரர்கள், ஓய்வூதியர்கள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை எடுப்பதற்காக நீண்ட வரிசையில் வங்கிகளில் காத்திருக்கிறார்கள்.
  மேலும், ரூ.500 நோட்டுகள் மாவட்டத்தில் மிகச்சில வங்கிகளில் மட்டும், அதுவும் குறைந்த அளவுக்கே விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.2 ஆயிரம் நோட்டு வைத்திருப்பவர்கள் சில்லறை பெறமுடியாமல் மிகவும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
   ஏடிஎம்களின் செயல்பாட்டை பொறுத்தவரை கடந்த 25 நாள்களாக திறக்கப்படாத ஏடிஎம்களே மாவட்டத்தில் அதிகமாக உள்ளன. ஒருசில வங்கிகளின் ஏடிஎம்கள் மட்டுமே திறக்கப்பட்டு தினமும் சில லட்சங்களை விநியோகம் செய்கின்றன.
  இப்பிரச்னை குறித்து கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் மு.மருதவாணன் கூறுகையில், புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியானது அரசு, தனியார் வங்கிகளுக்கு விநியோகம் செய்ததில் பாரபட்சம் காட்டியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள 8,200 வங்கிக் கிளைகளில் 6,000 கிளைகள் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ், ஸ்டேட் வங்கி மற்றும் கனரா வங்கிக் கிளைகளுடையதாகும். 65 சதவீத வாடிக்கையாளர்கள் பொதுத் துறை வங்கிகளில்தான் கணக்கு வைத்துள்ளனர். 10 சதவீதத்தினர் மட்டுமே தனியார் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள்.
   ஆனால், பொதுத் துறை வங்கிகளில் ஒரு நபருக்கு ரூ.2,000, ரூ.4,000 என்ற அளவில் மட்டுமே பணம் வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் வங்கிகளில் ரூ.24 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
  அதேபோல் மக்களிடமிருந்து பெறப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள் விவரத்தையும், குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்ட தனியார் வங்கிகள் மிகப்பெரும் அளவில் செல்லாத நோட்டுகளை வாங்கியது எப்படி என்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
   கடலூர் மாவட்டத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் போதிய அளவில் புழக்கத்துக்கு வரவில்லை எனவும், ரிசர்வ் வங்கி போதுமான அளவில் பணம் வழங்காததே இதற்குக் காரணம் எனவும் வங்கி அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai