சுடச்சுட

  

  நடா புயலை எதிர்பார்த்திருந்த கடலூர் மாவட்ட விவசாயிகள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.
  மாவட்டத்தில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலம், காவிரி டெல்டா பாசனப் பரப்புக்குள் வருகிறது.
  தற்போது டெல்டா பகுதிகளில் சம்பா பருவத்துக்கான நாற்றுகள் விடப்பட்டு அவை பாதி காலத்தை எட்டியுள்ளன. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
  மேட்டூர் அணையிலிருந்து போதிய தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா பகுதிகளில் பயிர்கள் காய்ந்துள்ளன.
  எஞ்சியுள்ள பயிர்களைக் காப்பாற்ற மழை பெய்தால் மட்டுமே வழிபிறக்கும் என்ற நிலையில் காத்திருந்த விவசாயிகளுக்கு, நடா புயல் குறித்த அறிவிப்பு சற்று ஆறுதலை அளித்தது.
  வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போன நிலையில் நடா புயலால் போதுமான மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக இப் புயலானது கடலூர் மாவட்டத்தில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டதால் விவசாயிகள் அதிக நம்பிக்கையுடன் இருந்தனர். இதற்கு ஏற்றாற்போல் கடலூர் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. ஆனால், புயல் வலுவிழந்ததோடு, போதியை மழைப் பொழிவையும் ஏற்படுத்தாமல், காரைக்கால் அருகே கரையைக் கடந்து சென்றுவிட்டது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  புயல் கரையைக் கடக்கும் முந்தைய நாளில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தபோதிலும் அது போதுமானதாக இல்லை.
  கரையைக் கடந்த நாளில் லக்கூரில் மட்டுமே 10 மி.மீ. அளவுக்கும், கடலூரில் 0.60 மி.மீ. அளவுக்கும் மட்டுமே மழை பதிவாகியுள்ளது.   இதனால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai