சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டம் மூலமாக மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான குடும்ப அட்டைகளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவதற்குப் பதிலாக, ஸ்மார்ட் அட்டைகளாக வழங்கிட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது விற்பனை முனை இயந்திரங்கள்(டர்ண்ய்ற் ர்ச் நஹப்ங்) மூலமாக குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
    கடலூர் மாவட்டத்தில் சுமார் 7.06 லட்சம் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் விற்பனை முனை இயந்திரங்களில் அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி சுமார் 65 சதவீத குடும்ப அட்டைகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது 1,415 நியாயவிலைக் கடைகளில் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    இப் பணியின் அடுத்தகட்டமாக, விற்பனை முனை இயந்திரங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை ஆய்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இப்பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களிலும் சனிக்கிழமை கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கடலூர் வட்டத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற 300 பேரும், வரும் 7ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள். அதனடிப்படையில் போலியான பதிவுகள் இருப்பின் அவை களையப்படும்.
    அதனைத் தொடர்ந்து புதிய ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி மாதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    இந்த முகாமில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பூவேந்திரன், கடலூர் வட்டாட்சியர் அர.அன்பழகன், நுகர்ப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் கலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai