சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு இலவச மண்வள அட்டை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தேசிய மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்களின் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்து மண்வள அட்டைகள் தயார் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மண்வளமே பயிர் வளர்ச்சிக்கு ஆதாரமாகும். மண்ணில் மண் புழுக்கள் மற்றும் நன்மைதரும் நுண்ணுயிர்கள் நிறைந்திருந்தால் மட்டுமே மண் ஜீவன் உள்ளதாகக் கருதப்படும். அத்தகைய மண்ணில் அங்ககச் சத்து அதிகரித்துக் காணப்படுவதுடன், அம்மண்ணில் விளையும் பயிர்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.
  அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மண்ணில் இடப்படும்போது மண்ணில் உள்ள மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு மண் உயிரற்றதாகிறது. இத்தகைய மண்ணில் விளையும் பயிர்களும் வளர்ச்சி குன்றி பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
  தீவிர பயிர் சாகுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் தமிழகத்தின் விளைநிலங்களின் மண்வளம் பொதுவாக பாதிக்கப்படுகிறது. மண் அரிப்பு, ஊட்டச்சத்து சமச்சீரின்மை, மண்வாழ் உயிரின வகைகள் குறைதல், கனரக உலோகங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மண் மாசுபடுதல், மாறி வரும் பருவ நிலைகளின் விளைவுகள் போன்ற காரணங்களால் 1980ஆம் ஆண்டில் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்ககச்சத்து 2011இல் 0.45 சதவீதமாக குறைந்துள்ளது.
   விளை நிலங்களின் மண்வள நிலையினை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிந்து அதற்கேற்ப பயிர்க்கேற்ற சமச்சீர் உரங்களை இடுவதும், அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதாலும் மட்டுமே இழந்த மண் வளத்தை மீட்கவும், பாதுகாக்கவும் முடியும். இதனைக் கருத்தில்கொண்டே தமிழக முதல்வரால் 2011-12ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
   இத்திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளின் விளைநில மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடித் திட்டத்தை மேற்கொள்ளவும், பயிர் வாரியான இடுபொருள்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை இடவும் விவசாயிகள் கையேடு மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
   தமிழகத்தின் இத்திட்டத்தினை முன்னோடியாகக் கொண்டு பிரதமரால் மண்வள அட்டைத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குள்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் பயிருக்கேற்ற உரப் பரிந்துரையுடன் கூடிய மண் வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
   எனவே, விவசாயிகள் அரசால் வழங்கப்படும் மண்வள அட்டையை இலவசமாகப் பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai