சுடச்சுட

    

    அதிக தழைச் சத்தினால் நெற்பயிரில் நோய் பாதிப்பு அபாயம்

    By DIN  |   Published on : 06th December 2016 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிக தழைச்சத்தினால் நெல்பயிரில் ஏற்படும் இலை சுருட்டுப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் பயிருக்கு இன்றியமையாத சத்துக்கள் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் ஆகும். தழைச்சத்துக்கள் பயிருக்கு வளர்ச்சியும், மணிச்சத்துகள் பயிருக்கு வேர் வளர்ச்சி, பூ மற்றும் மணிகள் உருவாகவும் மற்றும் சாம்பல் சத்து பயிருக்கு தண்டுகளின் உறுதி, வறட்சியினை தாங்கும் சக்தி மற்றும் பூச்சி நோய் எதிர்ப்பு தன்மையும் வழங்குகின்றன.
    விவசாயிகளிடம் தழைச் சத்தினை யூரியா மூலம் அதிக அளவில் இடும் பழக்கம் காணப்படுகிறது. தேவைக்கு அதிகமான தழைச்சத்தினை அளிக்கும்போது பயிர் நன்கு செழிப்பாக வளர்வதுடன், பலவிதமான பூச்சி நோய் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றது. அதிகளவில் தழைச்சத்து இடுவதால் நெற்பயிரினை பூச்சி இலை சுருட்டுப் புழு தாக்கி அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
    இப்புழுவினால் பாதிக்கப்பட்ட பயிர்களில் இலைகள் நீள வாக்கில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சையத்தினை சுரண்டி உண்பதால் இலைகள் வெண்மையாக மாறி பயிர் காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் காய்ந்ததுபோல் காட்சியளிக்கும்.
    இலை சுருட்டுப் புழுவின் பொருளாதார சேதநிலை அளவானது தழைப் பருவத்தில் 10 சதவீதம், இலை சேதம் மற்றும் பூக்கும் பருவத்தில் 5 சதவீதமும், கண்ணாடி இலைச்சேதமும் ஆகும்.
    நெற்பயிருக்குத் தேவையான தழைச் சத்தினை அடியுரமாகவும், தூர் கட்டும் பருவத்திலும், கதிர் வரும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் தருணம் என பிரித்து அளிக்க வேண்டும். மேலும் தழைச்சத்தின் தேவையினை இலை வண்ண அட்டை மூலமும் அறிந்துகொள்ளலாம்.
    இலை சுருட்டுப் புழுவினைக் கட்டுப்படுத்த தழைச்சத்தினை பயிரின் தேவைக்கு ஏற்பவே அளிக்க வேண்டும். நெல் வயல் வரப்புகளை சுத்தமாகவும், புல் வகை களைகளை அகற்றியும் பராமரிக்க வேண்டும். விளக்குப் பொறி அமைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அவற்றை அழிப்பதன் மூலமும் இதனை கட்டுப்படுத்தலாம்.
    பறவை இறக்கைகள் ஏக்கருக்கு 10 எண்கள் அளவில் வைத்து புழுக்களை கட்டுப்படுத்தலாம். பொருளாதார சேதநிலையைப் பொறுத்து எக்டருக்கு குளோர்பைரிபா 20 இசி 1,250 மி.லி. அல்லது புரபனோபா 50இசி 1000 மி.லி. அல்லது அசாடிராக்டின் 1,000 மி.லி என்ற அளவில் தெளித்து இலை சுருட்டுப்புழுவினை கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai