சுடச்சுட

  

  மாவட்டத்தில் திடீர் கடையடைப்பு: பேருந்துகளும் இயங்கவில்லை

  By DIN  |   Published on : 06th December 2016 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
  தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திங்கள்கிழமை மாலை அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரவியது.
  இதனைத் தொடர்ந்து கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துக் கடைகளும் தீடீரென அடைக்கப்பட்டன. பேருந்து நிலையம் அருகிலுள்ள கடைகளும் அடைக்கப்பட்டதால், அங்கு காத்திருந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பதற்றத்துக்குள்ளாகினர். நேரம் செல்லச் செல்ல பேருந்துகள் இயக்கமும் படிப்படியாக குறைக்கப்பட்டன. இதனால் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டியவர்கள் போதிய பேருந்துகள் கிடைக்காமல் கடலூர் பேருந்து நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். தங்களது ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கான வசதியின்றி பரிதவித்தனர்.
  மேலும் வாடகை வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தங்களிலிருந்து தங்களது வீடுகளுக்கும், மாற்று இடங்களுக்கும் கொண்டு சென்றனர். கடைகள் அடைக்கப்பட்டதாலும், பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
  இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் உத்தரவின்பேரில் போலீஸார் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கடலூர் பேருந்து நிலையம் பகுதியில் எஸ்பி செ.விஜயக்குமார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். காவல் துறையினருடன் இணைந்து ஊர்க்காவல் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
  பண்ருட்டி: பண்ருட்டியில் கடை உரிமையாளர்கள் மதியம் 3 மணியளவில் கடைகளை அடைக்கத் தொடங்கினர். பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் அதிமுகவினர் கூடினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். நெல்லிக்குப்பத்தில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசியதில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. திருவதிகையில் பெட்ரோல் நிலையம் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
  பின்பு படிப்படியாக நிலைமை சீரடைந்தது. தொடர்ந்து, போக்குவரத்துத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகளை பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
  முக்கிய இடங்களில் திரளான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai