சுடச்சுட

  

  முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் மெளன ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.
  நெய்வேலி: நெய்வேலி நகரியத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
  என்எல்சி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தொழிலகப் பகுதியில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. வழக்கம் போல் பணிகள் நடைபெற்றன. நிலக்கரி வெட்டி எடுப்பு மற்றும் மின் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
  பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு நகரச் செயலர் முருகன், அவைத் தலைவர் ராஜதுரை, முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன் உள்ளிட்ட அதிமுகவினர் திரளானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக மெளன ஊர்வலமாகச் சென்றனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
  இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மெளன ஊர்வலம் நடத்தப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாவட்டத் தலைவர் டி.சண்முகம், பொதுச் செயலர் வி.வீரப்பன், ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.சந்திரசேகர் மற்றும் ஜெயின், லைன்ஸ், வாகன ஓட்டுநர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
  மொட்டை அடித்து இரங்கல்: மந்தாரக்குப்பம், கம்மாபுரம் ஒன்றியம் சார்பில், தெற்குவெள்ளூர் கிராம அதிமுகவினர் மொட்டை அடித்து தங்களது இரங்கலை வெளிப்படுத்தினர்.
  வடலூர்: வடலூர், நான்குமுனைச் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அரசியில் கட்சியினர், பொதுமக்கள், நரிக்குறவர் பிரிவினர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் குறிஞ்சிப்பாடியிலும் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  ஜெயலலிதா மறைவையொட்டி பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
  மருந்துக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து இல்லாததால் பிரதான சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
  விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அதிமுகவினர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர் எம்.கே.விஜயகுமார் தலைமையில் அமைதி ஊர்வலம் நடத்தினர். முதல்வரின் உருவப் படத்துடன் பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி வழியாக எம்ஜிஆர் சிலை அருகே முடிவடைந்தது. அங்கு கட்சியினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
  நகர பொருளர் தங்க.ஜெய்சங்கர், வழக்குரைஞர் சதீஷ்குமார், நகர மகளிரணிச் செயலர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ரஞ்சிதம், ராஜேந்திரன், சந்திரா, மதியழகன், ராஜேந்திரன், ஆண்டாள்கலிவரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai