சுடச்சுட

    

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    புதிய ஆட்சியர் அலுவலகம்: கடலூரில் ரூ.25 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. ரூ.66 கோடியில் கடலூர் நகரில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. மீன்பிடி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மீன் இறங்கு தளங்கள் ரூ.7.78 கோடியில் முடசலோடையிலும், ரூ.2.50 கோடியில் சாமியார்பேட்டையிலும், ரூ.2.93 கோடியில் எம்ஜிஆர் திட்டிலும் அமைக்கப்பட்டன.
    சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவுக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    வெள்ளாற்று முகத்துவாரத்தை தூர்வாரிட ரூ.20.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடலூர் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தினை ஆழப்படுத்தி தூண்டில் வளைவு அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    ரூ.321 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணி: கடலூர் மாவட்டமானது பெண்ணையாறு, கெடிலம், உப்பனாறு, வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆகிய 5 ஆறுகளின் வடிகால் மாவட்டமாக உள்ளது. எனவே ஒவ்வொரு வடகிழக்குப் பருவ மழைக் காலத்திலும் வெள்ள பாதிப்பினைச் சந்திக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூ.321 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வெள்ள பாதிப்புப் பணிகளை சரிசெய்யவும், நிரந்தர திட்டத்துக்காகவும் பயன்படுத்த உத்தரவிட்டார்.
    அதன்படி வெள்ளத்தடுப்பு உடனடி பணியாக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 534 குளங்கள் மற்றும் ஏரிகளில் 324 நீர்நிலைகள் தூர்வாரும் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளன. 4,096 கி.மீ. தூர பாசன மற்றும் வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 7,183 குறுகிய பாலங்கள் சீரமைக்கப்பட்டதோடு, 690 கதவணைகளில் 93 கதவணைகளும், மொத்தமுள்ள 31 பெரிய பாலங்கள் மற்றும் 264 சிறிய பாலங்களில் அடைப்புகள் அகற்றப்பட்டன.
    நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளாக தலா ரூ.10 கோடியில் கீழணை அடைப்புப் பலகை புதுப்பிக்கும் பணி, பெரம்பட்டு புதிய அணைக்கட்டு விரிவாக்கப் பணி, ரூ.23.65 கோடியில் சேத்தியாதோப்பு அணைக்கட்டு புனரமைக்கும் பணி, ரூ.140 கோடியில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டத்துக்குள்பட்ட மணவாய்க்கால் மற்றும் பழையகொள்ளிடம் ஆற்றில் நிரந்தர வெள்ளப் பாதுகாப்புப் பணி, சிதம்பரம் வட்டம் பாசிமுத்தான் ஓடை, தில்லையம்மன் ஓடை, ஓமக்குளம் வடிகால், கான்சாகீப் வாய்க்கால் மற்றும் முத்தையாப்பிள்ளை வடிகால் வாய்க்கால், கெடிலம் ஆற்றில் விசூர் முதல் தேவனாம்பட்டினம் வரை வெள்ளப் பாதுகாப்புப் பணி, பண்ருட்டி வட்டம் விசூர் ஓடை மற்றும் பெரியக்காட்டுப்பாளையம் ஓடை வரை வெள்ளப் பாதுகாப்புப் பணி, பண்ருட்டி மற்றும் கடலூர் வட்டம், வெள்ளப்பாக்கம் வாய்க்காலில் நிரந்தர வெள்ளப் பாதுகாப்புப் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.
    வீராணம் ஏரி சீரமைப்பு: வீராணம் ஏரியின் கொள்ளளவை உயர்த்தி, கரைகளை பலப்படுத்தும் வகையில் ரூ.40 கோடியில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.5.30 கோடியில் பரவனாறுக் கரையை பலப்படுத்துதல், வெள்ளியங்கால் ஓடையில் உயர்மட்டப் பாலம் அமைத்தல், கீழ் அணுவம்பட்டுகிராமம் பாசிமுத்தான் ஓடையில் உயர்மட்டபாலம் அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலை உறுதி அளிக்கும் திட்டம், ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பாசன வாய்க்கால் 900 கி.மீ. தூர்வாரும் பணிகள் ரூ.25.93 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன.
    75 புதிய வீடுகள்: பண்ருட்டி வட்டம், பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 75 நபர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. கடலூர் வட்டம் கோண்டூர் கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பில் வடிகால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
    பெருமழையின் போது நெடுஞ்சாலைத் துறையில் மொத்தம் 440.832 கி.மீ. நீள சாலை பாதிக்கப்பட்டதோடு, 26 இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனை சீரமைக்க ரூ.24 கோடியில் 12 இடங்களில் குழாய் பாலங்கள் அமைக்கப்பட்டும், 14 இடங்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டும், சாலைகள் சீரமைப்பு செய்யப்பட்டன. மேலும், அனைத்துப் பேரூராட்சிகளிலும் ரூ.1.75 கோடியில் சாலைகள் சீரமைக்கப்பட்டன. இவ்வாறு மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் வளர்ச்சிப் பணிகளை முதல்வர் முடுக்கி விட்டுள்ளார்.
    செங்கால் ஓடை சீரமைப்பு: 3மீ அகலத்தில் ஓடிய செங்கால் ஓடையில், அதன் பழைய அளவான 40மீ அகலத்துக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 6 கி.மீ தூரத்துக்கு இரண்டரை மீட்டர் ஆழத்துக்கு தூர் வாரப்பட்டுள்ளது. மேலும் இருபுறங்களிலும் 5மீ உயரத்துக்கு கரைகள் அமைக்கப்படுகின்றன. செங்கால் ஓடைப் பணியானது தற்போது நிறைவு பெற்றுள்ள நிலையில், அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் சுமார் 10 கிராம மக்கள், அப்பிரச்னையிலிருந்து முழுமையாக தங்களை காத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai