சுடச்சுட

  

  முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
  தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாத்திட மாவட்ட எஸ்பி செ.விஜயக்குமார் போலீஸாரை உஷார்படுத்தினார். முன்னதாகவே காவல் துறையினருக்கான விடுப்புகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பணிக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.
  அதன்படி மாவட்டத்தில் 7 உள்கோட்டங்களைச் சேர்ந்த 1,500 போலீஸார், ஆயுதப்படை போலீஸார் 150 பேர், சிறப்பு காவல்படையினர் 140 பேர், ஊர்க்காவல் படையினர் 250 பேர் வீதம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகள், வணிக நிறுவனங்கள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
  மேலும், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ரோந்துப் படை அமைக்கப்பட்டு வாகனங்களில் ரோந்து சென்றனர். திங்கள்கிழமை மாலை பாதுகாப்புப் பணியை தொடங்கிய போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவையும் தாண்டியும் தங்களது பணியைத் தொடர்ந்தனர். உணவகங்கள், டீக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தங்களது உணவுத் தேவைக்காக சிரமத்துக்குள்ளாகினர். எனினும் மாவட்டத்தில் பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.
  நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு: ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் சென்னையை நோக்கி பயணித்தனர். இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வழியாகச் செல்லும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக எஸ்பி செ.விஜயக்குமார் கூறினார். அதேபோல் கிழக்கு கடற்கரைச் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai