சுடச்சுட

  

  இயல்பு நிலைக்கு திரும்பியது கடலூர் மாவட்டம்

  By நெய்வேலி,  |   Published on : 08th December 2016 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெயலலிதா மறைவையொட்டி திங்கள்கிழமை முதல் முடங்கிக் கிடந்த கடலூர் மாவட்டம் புதன்கிழமை இயல்பு நிலைக்கு திரும்பியது.
   தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
   சுமார் இரண்டரை மாதங்கள் சிகிச்சையில் இருந்தவர் குறித்து தவறான தகவல்கள் திங்கள்கிழமை பரவின. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் பிற்பகல் 3 மணி அளவில் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
   கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு 11.30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
   இதனால், செவ்வாய்க்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
   அன்றைய தினம் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரதான சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
   மாவட்டத்தில் ஒரு சில சிறு சம்பவங்களைத் தவிர அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
   ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுகவினர் மற்றும் பல்வேறு தரப்பினர் அவரது உருவப்படத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, மெüன ஊர்வலம் நடத்தினர்.
   இந்நிலையில், புதன்கிழமை காலை முதல் கடலூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கின.
   கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருந்தன. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட்டன. வியாழக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சாலையில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai