சுடச்சுட

    

    ஜெயலலிதா மறைவு: அண்ணாமலைப் பல்கலை.யில் இரங்கல் கூட்டம்

    By நெய்வேலி,  |   Published on : 08th December 2016 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
     பல்கலைக்கழக வளாக சாஸ்திரி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு துணைவேந்தர் எஸ்.மணியன் மலர் தூவி மரியாதை செலுத்தி இரங்கல் உரை நிகழ்த்தினார்.
     அவர் ஆற்றிய உரையில், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசுடைமையாக்கி, அதில் பணியாற்றும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காத்தவர் ஜெயலலிதா.
     இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் நீங்கா இடம் பெற்ற ஜெயலலிதா மறைவுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது.
     36-ஆவது வயதில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பேரறிஞர் அண்ணா அமர்ந்த இருக்கையில் அமர்ந்து மாநிலங்களவையை அலங்கரித்தவர்.
     1989-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1991-இல் தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து 2001, 2011, 2016 ஆகிய கால கட்டங்களில் தமிழகத்தின் முதல்வராக, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தவர்.
     போர்க்குணத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். தன்னம்பிக்கையின் ஊற்றாக விளங்கியவர். கடும் உழைப்பினால் கலங்காத உள்ளத்தால், சிகரங்களைத் தொட்ட சாதனையாளர். அரசியல் உலகில் தன் மதிநுட்பத்தால் வாகை சூடியவர்.
     உலகின் தலைசிறந்த பெண்கள் வரிசையில் தனது பெயரையும் இடம்பெறச் செய்த வரலாற்று புகழுக்குச் சொந்தக்காரர்.
     தனக்கென ஒரு குடும்பம் இல்லாமல் தமிழகத்தையே தன் குடும்பமாகக் கருதியவர். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்னும் தாரக மந்திரந்தால் தமிழகத்தை ஆட்சிபுரிந்த அற்புதத் தலைவர். அம்மையாரின் மறைவுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அவர் தம் குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் அனைவர் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகத் தெரிவித்தார்.
     நிகழ்ச்சியில், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள், பதிவாளர் (பொ) க.ஆறுமுகம், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி இராம.சந்திரசேகரன், தொலைதூரக் கல்வி இயக்குநர் எஸ்.புகழேந்தி, கல்வித் திட்ட இயக்குநர் கே.மணிவண்ணன், அனைத்து புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என திரளாக கலந்து கொண்டனர்.
     தேர்வுகள் ஒத்திவைப்பு: முதல்வர் மறைவையொட்டி, டிச.6, 7, 8 ஆகிய தேதிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai