சுடச்சுட

  

  விருத்தாசலம் அருகே 40 பேருக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

  By நெய்வேலி,  |   Published on : 08th December 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலம் அடுத்துள்ள எடையூர் காலனி பகுதியில் 40 பேருக்கு செவ்வாய்க்கிழமை திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
   பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள எடையூர் காலனியில் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பலருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
   பாதிக்கப்பட்டவர்கள் விருத்தாசலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
   இதுகுறித்து விசாரித்ததில், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சோமவார விழாவின்போது விநியோகிக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக ஒரு தரப்பினரும், சுகாதாரம் இல்லாத குடிநீர்த் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் நீரைக் குடித்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக மற்றோரு தரப்பினரும் கூறுகின்றனர்.
   பாதிக்கப்பட்ட பத்மாவதி (50), ராஜமாணிக்கம் (45) ராமமூர்த்தி (40), சங்கீதா (28), அஞ்சலை (50) உள்பட சுமார் 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
   தகவலறிந்த சுகாதாரத் துறையினர் எடையூர் பகுதியில் முகாமிட்டு மற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
   மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்ததால் கிராம மக்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   கிராம மக்கள் புகார்
   மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தமாக இல்லை. எனவே, சுத்தம் செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai