சுடச்சுட

  

  கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

  By கடலூர்,  |   Published on : 09th December 2016 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் வியாழக்கிழமை 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
   தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதியில் வர்தா என்ற புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் வரும் 12ஆம் தேதி ஆந்திர மாநிலம், நெல்லூர்-காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   புயலையொட்டி கடலூர் துறைமுகத்தில் ஏற்கெனவே ஏற்றப்பட்டிருந்த ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு, வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டாக ஏற்றப்பட்டது.
   இதனால், கடலூர் மாவட்டத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கடலூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
   மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் பெரிய படகுகளைத் தவிர மற்ற படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சுமார் 1,800 பைபர் மற்றும் சிறிய படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
   புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பெரிய படகுகளும் மாலையில் கரை திரும்பத் தொடங்கின.
   படகு கவிழ்ந்து விபத்து: கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் மணிகண்டன் (26) தலைமையில் 5 பேர் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கடல் சீற்றம் காரணமாக அவர்கள் வியாழக்கிழமை கரை திரும்பிக்கொண்டிருந்தனர்.
   கடலூர் துறைமுகம் முகத்துவாரம் அருகே வந்த போது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில், மீனவர்கள் 5 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இருப்பினும், அவர்கள் நீச்சலடித்து கரைக்கு வந்தடைந்தனர்.
   புதுச்சேரி துறைமுகத்தில்... புதுச்சேரி துறைமுகத்தில் புதன்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டது.
   கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai