சுடச்சுட

    

    வங்கிகளில் ரூ.1,800 கோடி முதலீடு: தொடரும் பணத் தட்டுப்பாடு

    By கடலூர்,  |   Published on : 09th December 2016 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் ரூ.1,800 கோடியை பொதுமக்கள் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதிய பணம் வழங்காததால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
     உயர் மதிப்புக்கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவ.8ஆம் தேதி இரவு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. இது கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைச் செலுத்தி ரூ.4 ஆயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், தங்களது கைவசம் உள்ள செல்லாத நோட்டுகளை வங்கியில் முதலீடு செய்து பின்னர் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.
     அதன்படி கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 234 அரசுடமை மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் ரூ.1,800 கோடி முதல் ரூ.1,900 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக வங்கித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடலூர் மாவட்ட வங்கிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ரிசர்வ் வங்கியால் இதுவரை சுமார் ரூ.500 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாம்.
     மேலும், கடந்த 15 நாள்களாக ரிசர்வ் வங்கியிலிருந்து கடலூர் மாவட்ட வங்கிகளுக்கு போதிய அளவுக்கு பணம் வரவில்லையெனவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வழங்க முடியாமல் தவிப்பதாகவும் வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
     குறிப்பாக அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் வியாழக்கிழமை ரூ.50 ஆயிரம் மட்டுமே கையிருப்பில் இருந்துள்ளது. இதனால் அந்த வங்கி நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
     மேலும் ரிசர்வ் வங்கி புதிய ரூ.500 நோட்டுகளை வழங்கி வருவதாக கூறியபோதிலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட பெரும்பாலான வங்கிக் கிளைகளுக்கு இந்த தாள்கள் சென்று சேரவில்லை. இதனால் ரூ.2 ஆயிரத்துக்கு சில்லறை வழங்க முடியாமல் வங்கிகளும், வணிக நிறுவனங்களும் பரிதவித்து வருகின்றன.
     செயல்படாத ஏடிஎம் மையங்கள்:மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 376 ஏடிஎம்களில் வியாழக்கிழமை நிலவரப்படி 90 சதவீதம் இயங்கவில்லை. இயங்கிய சில ஏடிஎம்களும் முதலில் வைக்கப்பட்ட பணம் காலியானதும் மூடப்பட்டன. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் கிடைக்காததால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
     இதுகுறித்து வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது வங்கிக்கு முதலீடாக வந்துள்ள சுமார் ரூ.1,900 கோடியும் கறுப்பு பணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அதனை வங்கியில் செலுத்தி மாற்றுவதற்காகவே அவை முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் ரூ.1,600 கோடி வரை திருப்பி எடுக்கவே மக்கள் விழைவார்கள். ஆனால், ரூ.500 கோடி வரை மட்டுமே மக்களிடம் புழக்கத்துக்குச் சென்றுள்ளது. அதிலும் ரூ.200 கோடி அளவுக்கு பொதுமக்கள் புழக்கத்தில் விடாமல் தங்களது கைவசம் வைத்திருப்பார்கள். எனவே, கூடுதலாக பணம் வழங்குவதோடு, ரூ.500 நோட்டும் விநியோகிப்பதே பணத்தட்டுப்பாட்டு பிரச்னையை தீர்க்கும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai