சுடச்சுட

    

    டிச.15 முதல் இ-சேவை மையங்களில் அனைத்து வகை சான்றிதழ்கள்

    By DIN  |   Published on : 11th December 2016 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இ-சேவை மையங்களில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அனைத்துச் சான்றிதழ்களும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் செயல்படும் அரசு இ-சேவை மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்களுக்கு வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, முதல் பட்டதாரி ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற சான்றிதழ்கள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரடியாக வழங்கப்பட்டு வந்தன.
    இதனை மாற்றியமைத்து அனைத்துச் சான்றிதழ்களையும் இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் டிச.15ஆம் தேதி முதல் வாரிசுச் சான்று உள்பட 20 சான்றுகள் வழங்கப்பட உள்ளன.
    இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டங்களின் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    சார் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், இ-சேவை மைய மேலாளர் இனிதாதேவி, செல்வ முத்துக்குமரன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
    இதையடுத்து, வருகிற 15ஆம் தேதி முதல் அனைத்து இ-சேவை மையங்களிலும் பொதுமக்கள் தங்களுக்கான அனைத்து சேவைகளையும் பெற முடியுமென ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    முன்னதாக, பயிற்சிக்கு வந்திருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பயிற்சியில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகள் பழுதடைந்துள்ளன. இ-சேவை மையங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, அதனை மறுபடியும் அனுப்பி வைக்கும் பணிக்கு இணைய வசதி தேவைப்படுகிறது. இதற்காக செலவிடப்படும் தொகை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை.
    மேலும், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    இதனையடுத்து அவர்களிடம் வட்டாட்சியர் அர.அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
    கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai