சுடச்சுட

  

  கொள்ளிடம் குடிநீர்த் திட்டப் பணி பிப்ரவரியில் நிறைவடையும்: ஆட்சியர்

  By கடலூர்,  |   Published on : 12th December 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
   மாவட்டத்தில் கடலூர் நகராட்சி, புவனகிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகள் மற்றும் 812 கடற்கரையோர ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, கொள்ளிடம் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு ரூ.260.54 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு கடந்த 2013ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இத்திட்டத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி வீதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
   97 கி.மீ. தூரம் கொண்ட இப்பணிகள் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருமென அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள எய்யலூர், குச்சிபாளையம், ஆச்சாள்புரம், திருகாட்டூர் ஆகிய பகுதிகளில் ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படும். பின்னர் சி.முட்லூரில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தண்ணீர் உந்தப்பட்டு கடலூருக்கு அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
   தற்போது இத்திட்டப் பணிகளுக்கான குழாய்கள் அமைக்கும் பணி பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. ரயில் தண்டவாளம் கடக்கும் பகுதி, நெடுஞ்சாலைப் பகுதிகளில் குழாய் அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. எனினும் சி.முட்லூர் நீரேற்றும் நிலையத்துக்கு தண்ணீர் அனுப்பி வைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஆனாலும் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுமையாக மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
   இதுபோல், மின் இணைப்பு வழங்காதது, குழாய் பதிப்பதற்கான அனுமதி பெறுவதில் தாமதம் என இத்திட்டப்பணி இதுவரை முழுமையாக நிறைவேறவில்லை.
   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறுகையில், சி.முட்லூரில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மின்சார இணைப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றப் பணிகளும் விரைவில் தொடங்கிவிடும். வருகிற ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி மாதத்துக்குள் இப்பணிகள் நிறைவடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai