சுடச்சுட

  

  "வர்தா'வை எதிர்கொள்ள தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்

  By கடலூர்,  |   Published on : 12th December 2016 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வர்தா புயலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
   வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயலானது திங்கள்கிழமை மதியம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
   கூட்டத்தில் மாவட்ட எஸ்பி செ.விஜயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ச.சா.குமார் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில், ஏற்கெனவே நடா புயலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழுக்களை மீண்டும் செயல்படுத்தவும், அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
   அதன்பிறகு செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: கடலூரில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை அருகே புயல் கரையைக் கடந்தால் 200 கி.மீ. தூரம் வரை அதன் பாதிப்புகள் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. அதனால் கடலூர் மாவட்டத்திலும் பாதிப்புக்கான வாய்ப்புள்ளதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
   இப்புயல் மதியம் 1 மணி முதல் 3 மணிக்குள் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 65 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் புயலுக்குப் பின்னர் மின்சாரம் தடைபடவும் அதிக வாய்ப்புள்ளது. எனினும் குறுவட்ட அளவில் வட்டாட்சியர் தலைமையில் 32 குழுக்களும், கிராம அளவில் 274 குழுக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 14 பல்நோக்கு தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளன. 7 ஆயிரம் லிட்டர் பால்பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடலூர்-சிதம்பரம், பண்ருட்டி-கும்பகோணம், சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் ஆகிய சாலை வழித்தடங்களில் 250 போலீஸார் கொண்ட மீட்புக்குழுக்கள் நிறுத்தி வைக்கப்படும்.
   இக்குழுவினர் சாலையில் மரங்கள் உள்ளிட்டவை விழுந்தால் அதனை பொக்லைன் இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரங்கள் மூலமாக உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர்ப்படுத்துவார்கள். தற்போது கடல் மட்டமானது 1மீ வரை உயர்ந்துள்ளது. கடலில் காற்று 65 கி.மீ. வேகத்தில் வீசி வருகிறது. மாவட்டத்தில் புயலால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது என்றார். மேலும், புயலையொட்டி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதோடு, புயல் வீசும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai