சுடச்சுட

  

  வர்தா புயலால், கடலூர் மாவட்டம் போதிய மழைப்பொழிவை பெறவில்லை. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 11 மி.மீ. மழை பதிவானது.
   வங்கக் கடலில் உருவான வர்தா புயல் திங்கள்கிழமை சென்னை அருகே பழவேற்காட்டில் கரையைக் கடந்தது. இப் புயல் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் 8ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இருந்தபோதும், கடலூர் மாவட்டத்தில் போதுமான மழைப்பொழிவு இல்லை. திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு சாரல் மழை பெய்தது. இரவில் சாரலின் வேகம் சற்று அதிகரித்தது.
   செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 11 மி.மீ. மழை பதிவானது.
   மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: ஸ்ரீமுஷ்ணம் 8, கடலூர் 7.30, புவனகிரி 7, கொத்தவாச்சேரி, லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு தலா 6, வானமாதேவி, மேல்மாத்தூர் தலா 5, விருத்தாசலம், பண்ருட்டி தலா 4, அண்ணாமலை நகர், குப்பநத்தம் தலா 3.60, காட்டுமன்னார்கோவில், பெலாந்துறை தலா 2 மில்லி மீட்டர் வீதம் மழை பதிவானது.
   காட்டுமயிலூர், கீழச்செருவாய், லக்கூர், தொழுதூர், வேப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை.
   கடந்த வாரம் ஏற்பட்ட நடா புயலின்போதும் கடலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. தற்போது வர்தா புயலின்போதும் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் மானாவாரி பயிர்கள் நீரின்றி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
   கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிரம்பி வழிந்த வீராணம், பெருமாள் ஏரிகள், வெலிங்டன் நீர்த்தேக்கம் ஆகியவை போதிய தண்ணீர் இல்லாமல் தற்போது குட்டைபோல் காட்சியளிக்கின்றன. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
   கடலுக்குச் சென்ற மீனவர்கள்: வர்தா புயல் எச்சரிக்கையை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் சுமார் 200 மட்டும் கடலுக்குச் சென்றன. கரையோரத்தில் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து, மற்ற மீன்பிடி படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
   
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai