சுடச்சுட

    

    'ஸ்வைப்' இயந்திரம் இல்லாத ரயில் நிலையங்கள்: பயணிகள் தவிப்பு

    By நமது நிருபர், கடலூர்  |   Published on : 14th December 2016 11:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    money

     

    கடலூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில், "ஸ்வைப்' இயந்திர வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
     மத்திய அரசு கருப்புப் பணத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக உயர் மதிப்புகொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 8ஆம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்ற பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
     பொதுமக்கள் அன்றாடச் செலவுகளை மேற்கொள்ளும் போது, வணிக நிறுவனங்களில் உள்ள "ஸ்வைப்' இயந்திரங்களில் தங்களது பற்று மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இணையதளம் மூலமாக பணப் பரிமாற்றம் செய்ய வேண்டுமெனவும் கூறி வருகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினை வரவேற்கும் விதமாக, பல்வேறு வணிக நிறுவனங்களும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களிடம் முன்பைவிட ஆர்வமாக மேற்கொள்கின்றன. இதுவரை "ஸ்வைப்'இயந்திரங்கள் பொருத்தப்படாத நிறுவனங்கள், அதனை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் "ஸ்வைப்' இயந்திரங்கள் அமைக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
     குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிபுலியூர், கடலூர் சந்திப்பு, சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில், பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
     இந்த மையங்களில் தினமும் சுமார் 600 பேர் வரை முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவு இல்லாமல் 1,500 பேர் வரை பயணச் சீட்டு பெறுகின்றனர்.
     கடலூர் மார்க்கமாக சென்னை, திருப்பதி, புவனேஸ்வர், ராமேஸ்வரம், மன்னார்குடி, திருச்சி, மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 34 ரயில்கள் சென்று வருகின்றன.
     இதில் 6 ரயில்கள் விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சிக்கான பயணிகள் ரயில்களாகவும், மற்றவை தினசரி, 2 நாள்களுக்கு ஒன்று மற்றும் வாராந்திர ரயில்களாகவும் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த வழித்தடங்களில் மாதாந்திர பயணம் மேற்கொள்ளும் வகையில் சுமார் 4,500 பேர் அதற்கான அட்டை பெற்றுள்ளனர். தற்போது, ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பெறுவோர், ரொக்கமாகச் செலுத்தி வருகின்றனர்.
     தொலைதூரங்களுக்கு பயணச் சீட்டு பெறுவோர் அதற்கான அதிக கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
     கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வங்கிகளில் பெரும்பாலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றன. ரூ.500 நோட்டுகள் போதிய அளவில் பயன்பாட்டுக்கு வராததால், ரயில் நிலையத்தில் பணம் செலுத்துவதில் பயணிகள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனவே, ரயில் நிலையங்களில் "ஸ்வைப்' இயந்திரங்களை உடனடியாக நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
     இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறுகையில், பணப் பிரச்னையால் ரயிலில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. ரயில் நிலையங்களில் "ஸ்வைப்' இயந்திரம் பொருத்துவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து, முதல்கட்டமாக பெரிய நகரங்களில் பொருத்தும் பணியை தொடங்கியுள்ளது.
     விரைவில் கடலூர் மாவட்டத்தில் இப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai