சுடச்சுட

  

  பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாலை மறியல் வாபஸ்

  By நெய்வேலி  |   Published on : 15th December 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேசிய சமூக நலக் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை நடத்த இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
   பண்ருட்டி வட்டம், பூங்குணம் ஊராட்சிக்கு உள்பட்ட சூரக்குப்பம், சூரக்குப்பம் காலனி, அண்ணா நகர், வள்ளலார் நகர் பகுதி மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கு உடனுக்குடன் ஊதியம் வழங்குதல், சூரக்குப்பம் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிச் சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
   தேசிய சமூக நலக் கூட்டணியினர் சூரக்குப்பத்தில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
   இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் விஜய்ஆனந்த் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
   இதில், அரசு சார்பில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராஜவேலு, மண்டல துணை வட்டாட்சியர் பூபாலச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெகதீஷ், தேசிய சமூக நலக் கூட்டமைப்பு சார்பில், நிர்வாகக் குழு ஆர்.எம்.செல்வக்குமார், ஜி.கே.மணிமாறன், எம்.புரட்சிபாபு, ஒருங்கிணைப்பாளர் என்.அர்ஜூனன், தலைவர் எம்.தெய்வீகதாஸ், செயலர் செüகத்அலி, துணைத் தலைவர்கள் எம்.பழனிவேல், டி.மக்கள்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   கூட்டத்தில், அரசு உதவித்தொகை, சம்பந்தப்பட்ட வங்கி தொடர்பாளர் மூலம் வழங்கப்படுகிறது. உரிய மாதத்தின் பணம் அடுத்த மாத்திற்குள் கிடைக்கப் பெறாத நபர்கள் வங்கிப் புத்தகம், ஆதார் அட்டை நகலுடன் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினால் கணினியில் ஆய்வு செய்து வழிவகை செய்யப்படும்.
   மேலும், பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் குறைபாடுகளை அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
   ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பூங்குணம் ஊராட்சித் தொழிலாளர்களுக்கு கூலித்தொகை அதிகபட்சமாக கிடைத்திடும் வகையில், பணி மேற்பார்வையாளர் அளவீடு செய்து வேலை வங்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.
   சூரக்குப்பத்தில் பாரத ஸ்டேட் வங்கிச் சேவை மையத்தை விரிவுப்படுத்த வங்கி மேலாளருக்கு பரிந்துரை செய்யப்படும் என தீர்மானித்தனர்.
   மேற்கண்ட தீர்மானங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai