சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் 2,070 காவலர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை மாவட்ட எஸ்.பி. செ.விஜயக்குமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
   தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு புத்தாக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்போது, துப்பாக்கிகளைக் கையாள்வது தொடர்பான பயிற்சி, ராமாபுரத்திலுள்ள காவலர் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் பங்கேற்று பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பிஸ்டல் மற்றும் கார்ஃபைன் ஆகிய துப்பாக்கிகள் மூலமாக 2 சுற்றுகள் சுட்டார்.
   பின்னர் எஸ்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பயிற்சியின்படி, தற்போது மாவட்டத்திலுள்ள 2,070 காவலர்களுக்கும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் 150 பேர் வீதம், 15 நாள்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும்.
   இதில் பிஸ்டல், ஏ.கே.47, கார்ஃபைன், இன்சஸ், எஸ்எல்ஆர், 303 ஆகிய ரக துப்பாக்கிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
   கண்காணிப்பாளர் முதல் ஆயுதப் படை காவலர்கள் வரை இதில் பங்கேற்கின்றனர்.
   பயிற்சியில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படுவதோடு, மாநில அளவிலான காவலர் துப்பாக்கிச் சுடும் போட்டிக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். பயிற்சிக்காக 51,750 துப்பாக்கி ரவைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றார். பயிற்சியின் போது துணைக் கண்காணிப்பாளர் கணேசன், ஆயுதப்படை ஆய்வாளர் சிவசங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai