சுடச்சுட

    

    போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட வேண்டும்: நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிபுல்லா

    By நெய்வேலி,  |   Published on : 17th December 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் துறைகளின் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிபுல்லா கூறினார்.
     என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வைர விழாவையொட்டி, நெய்வேலி கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில், ஒப்பந்த மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு, என்எல்சி இந்தியா தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது: தேசத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கினை பொதுத் துறை நிறுவனங்கள் வழங்குகின்றன. தனியார் துறைகளின் போட்டிகளை எதிர்கொள்ள அவை சிறப்பாகச் செயல்பட வேண்டும். கொள்முதல் துறையில் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, அனைத்து செயல்முறைகளையும் வெளிப்படையாக மேற்கொண்டால் நிறுவனம் வளர்ச்சி பெறும் என்றார்.
     மத்திய நிலக்கரி அமைச்சக செயலர் சுசில்குமார், காணொலிக் காட்சி மூலம் பேசுகையில், பொதுத் துறை நிறுவனங்கள் ஒப்பந்த மேலாண்மைத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டியுள்ளதால், இதுபோன்ற கருத்தரங்குகள் அதற்கு சிறந்த வழியாக அமைக்கின்றன என்றார்.
     சரத்குமார் ஆச்சார்யா பேசுகையில், என்எல்சி இந்தியா நிறுனத்தில் ஒப்பந்த மேலாண்மை, மனிதவள மேலாண்மை, கொள்முதல் மேலாண்மை போன்ற துறைகளில், சிறப்பான வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.
     மேலும், என்எல்சி ஒப்பந்தத் துறையானது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின் நிலையம் அமைக்க 8 நாள்களில் பணி ஆணை வழங்கியதற்காகப் பாராட்டு தெரிவித்தார்.
     பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிலைக் குழு பொது இயக்குநர் யு.டி.செüபே ஆற்றிய சிறப்புரையில், தற்போது நாட்டில் 298 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மத்திய அரசு 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 45 பொதுத் துறை நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்ய அங்கீகாரம் பெற்றுள்ளன. இது, மொத்த பரிவர்த்தனையில் எண்ணிக்கை அடிப்படையில் 5 சதவீதமாகும். ஆனால், பரிவர்த்தனை செய்யும் தொகையின் அடிப்படையில் கணக்கிடும்போது அவை சுமார் 16 சதவீதம் பங்களிப்பினை வழங்கி வருகின்றன. இதன்மூலம், தேசத்தின் நலனில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது என அறிய முடியும் என்றார்.
     மத்திய பொருள் விற்பனை நிறுவனத் தலைவர் பி.பி.சிங், வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து, நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் பி.செல்வக்குமார் பேசினார். நிகழ்ச்சியில், இயக்குநர்கள் ராக்கேஷ் குமார், சுபீர்தாஸ், வி.தங்கபாண்டியன், ஆர்.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கருத்தரங்கில், கொள்முதல் மேலாண்மை, ஒப்பந்தப் புள்ளி வரவேற்றல், ஒப்பந்த மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் ஒப்பந்தத் துறை உயர் அதிகாரிகள் சமர்ப்பிக்கின்றனர்.
     பாரத மிகுமின் நிறுவனப் பொது மேலாளர் சிறில் பெர்னாண்டோ, என்.டி.பி.சி. மேலாண்மை கல்வி நிலைய முதல்வர் என்.என்.மிஸ்ரா, இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளர் பங்ஞ்குமார் ஆகியோர் அமர்வுகளுக்கு பொறுப்பேற்கின்றனர். நாட்டின் தலைசிறந்த தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகள் சுமார் 200 பேர் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
     முன்னதாக, என்எல்சி ஒப்பந்தத் துறையின் பொது மேலாளர் என்.அனந்தராமன் வரவேற்க, சட்டத் துறை துணைப் பொதுமேலாளர் வி.ராஜீவன் நன்றி கூறினார்.
     கருத்தரங்கையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை விளக்கும் கண்காட்சியும் நடைபெறுகிறது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai