சுடச்சுட

  

  மாணவர் சாவில் சந்தேகம்: சடலத்தைத் தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை

  By நெய்வேலி  |   Published on : 17th December 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை இரவு தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர்.
   பண்ருட்டி அருகே உள்ள துண்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். விவசாயி. இவரது மகன் வெற்றிவேல் (14), சாத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
   கடந்த 10ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற வெற்றிவேல், பின்பு சக மாணவர்களுடன் அதே பகுதியில் வசிக்கும் எட்வர்ட்டின் வீட்டில் இருந்த செல்லிடப்பேசியை எடுக்க முயன்றாராம். இதைப் பார்த்த எட்வர்டு, வெற்றிவேலைப் பிடித்து அவரது தாய் கோவிந்தம்மாளுக்கு தகவல் அளித்தார். இந்த நிலையில், வெற்றிவேல் அங்கிருந்து தப்பியோடி, கீழ்மாம்பட்டில் வசிக்கும் தனது பாட்டி வேதவல்லி வீட்டுக்குச் சென்று தங்கினார்.
   கோவிந்தம்மாள் அங்கு சென்று, வெற்றிவேலை கடந்த 14ஆம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால், சற்று நேரத்தில் வெற்றிவேல் மீண்டும் பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
   இந்த நிலையில், பாட்டிக்குச் சொந்தமான நிலத்தின் அருகே, வாயில் நுரை தள்ளிய நிலையில் வெற்றிவேல் கிடந்தார். அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே வெற்றிவேல் உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் சாத்திப்பட்டு கெடிலம் நதிக்கரையில் சடலத்தைப் புதைத்தனர்.
   இதுகுறித்து தகவலறிந்த காடாம்புலியூர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்தனர்.
   பின்பு, உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   மேலும், சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai