சுடச்சுட

  

  கடலூர் நகராட்சியில் நிகழாண்டும் ரூ.20 கோடி வரி பாக்கி உள்ளதால், அதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
  உள்ளாட்சி அமைப்புகளை இயக்குவதற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது வரி வசூலாகும். வசூலாகும் வரியில், குறிப்பிட்ட சதவீதத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பொது நிதியாக, வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்த முடியும். அதன்படி நகராட்சிகள் சொத்துவரி, தண்ணீர் வரி, குத்தகை வரி, தொழில் வரி ஆகிய வகைகளில் பொதுமக்களிடமிருந்து வருவாயைப் பெற்று வருகின்றன.
  இதில் கடலூர் பெருநகராட்சிக்கு இந்த 4 வரியினங்கள் மூலமாக ஆண்டுதோறும் சுமார் ரூ.29 கோடிக்கு வருவாய் வர வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்ட அளவிலிருந்து வரி வருவாய் குறைந்த அளவே வந்துள்ளது. குறிப்பாக கடந்த 2015-16ஆம் நிதியாண்டுக்கு வரவேண்டிய வரி வருவாயான ரூ.29.34 கோடியில், ரூ.9.32 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
  நடப்பு 2016-17ஆம் நிதியாண்டில் வசூலாக வேண்டிய வரி ரூ.29.91 கோடியாகும். ஆனால் நவம்பர் மாதம் இறுதி வரை ரூ.5.74 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. அதுவும், செல்லாதவை என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வரியாக பெறப்படும் என்ற அறிவிப்பினால், நவம்பர் மாதத்தில் ரூ.1.56 கோடி வரி வசூலாகியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.25.10 லட்சம் மட்டுமே வரி வசூலானது குறிப்பிடத்தக்கது.
  நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 3 மாதங்கள் உள்ளதால், கூடுதலாக ரூ.4 கோடி வரை வரி வசூலாகும் என எதிர்பார்ப்பதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.29 கோடி வரி நிர்ணயம் செய்யப்பட்டும், அதில் ரூ.20 கோடி வரை பாக்கி இருந்து வருவதால் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை திறம்பட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே வரி வசூலை துரிதப்படுத்த வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
  இதுகுறித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்க பொதுச் செயலர் மு.மருதவாணன் கூறுகையில், கடலூர் நகராட்சியில் கடந்த 2014-15ஆம் நிதியாண்டிலிருந்து, புதிய கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யப்படவில்லை. இதனால் சுமார் 500 வீடுகள், 500 வணிக நிறுவனங்களுக்கு வரி நிர்ணயம் செய்யப்படவில்லை. ரூ.25 ஆயிரத்துக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
  3 அரையாண்டுகளுக்கு வரிபாக்கி வைத்திருப்பவரின் சொத்துக்களை ஜப்தி செய்திடும் அதிகாரம் நகராட்சிக்கு உள்ளது. ஆனால் அதன்படி நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றத்தில் நகராட்சி வழக்கு தொடர்கிறது. அவ்வாறு தொடரும் வழக்கிலும் அதிகாரிகள் சரிவர ஆஜராவதில்லை.
  வரிவிதிப்புக் குழுவில் கவுன்சிலர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களையும் சேர்க்கும்போது ஊழல் நடைபெறுவதை பெருமளவில் குறைத்து, வரியை முழுமையாக வசூலிக்க முடியும். இதனால் நகராட்சியின் வளர்ச்சிப் பணிகளும் முழுமை பெறும் என்றார்.
  இதுகுறித்து கடலூர் நகராட்சி ஆணையர் விஜயகுமார் கூறுகையில், கடந்த காலங்களில் உள்ள நிலுவைத் தொகையையும் சேர்த்து வசூலிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தமுறை
  முழுமையாக வரி வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai