சுடச்சுட

  

  நிலுவைத் தொகை அளிக்கக் கோரி ஜன. 3 முதல் காத்திருப்புப் போராட்டம்: கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு

  By DIN  |   Published on : 18th December 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சர்க்கரை ஆலைகள் ரூ.1,600 கோடி நிலுவைத் தொகையை அளிக்கக் கோரி, ஜனவரி 3}ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
  இந்தச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், நெல்லிக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார்.
  தீர்மானங்கள்: தமிழகத்தில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள், கடந்த 3 ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை அளிக்காமல், ரூ.1,400 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர்.
  18 கூட்டுறவு ஆலைகள் மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள் ரூ.250 கோடி பாக்கி வைத்துள்ளன. கடுமையான வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகள், உற்பத்தி செலவுகள் அதிகரித்த நிலையிலும், ஆண்டு முழுவதும் பாடுபட்டு, கரும்பை பாதுகாத்து சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பணத்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
  குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, மறு சாகுபடிக்குக் கூட பணம் இல்லாததால் கரும்பு விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். தனியார் மற்றும் கூட்டுறவு ஆலைகளில் ரூ.1,600 கோடி வரை பாக்கி உள்ளது. இதனை வட்டியுடன் பொங்கலுக்கு முன்பு வழங்கிட வேண்டும். மேலும், 2016-17ஆம் பருவ கரும்புக்கு, மாநில அரசு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து ஆலைகளிலும் காலவரையற்ற காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  கூட்டத்தில் மாநில பொதுச் செயலர் டி.ரவீந்திரன், பொருளர் எம்.சின்னப்பா, மாநில நிர்வாகிகள் எஸ்.காமராஜ், டி.பி.கோபிநாத், செ.நல்லக்கவுண்டர், எ.எம்.பழனிச்சாமி, ஏ.ஜனார்தனன், சக்திவேலு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன், ஜி.மாதவன், தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai