சுடச்சுட

  

  பொதுத் துறை நிதியைச் செலவிடும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்: சரத்குமார் ஆச்சார்யா

  By DIN  |   Published on : 18th December 2016 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொதுத் துறை நிதியைச் செலவிடும்போது அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என என்எல்சி இந்தியா தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார்.
  என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வைர விழாவை முன்னிட்டு, நெய்வேலியில் ஒப்பந்த மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிலைக்குழு என்ற தொழில் ரீதியிலான அமைப்புடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  சனிக்கிழமை கருத்தரங்கின் 2ஆம் நாள் நிகழ்ச்சி மற்றும் நிறைவு விழா நடைபெற்றது.
  ஒடிஸா மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சக ஆணையர் மற்றும் செயலர் ஜி.மதிவதனன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், நிறுவனம் தற்போது பெற்றுள்ள வளர்ச்சிக்கு காரணமாக திகழும் அதிகாரிகளையும், தொழிலாளர்களையும் பாராட்டினார்.
  கெளரவ விருந்தினராகப் பங்கேற்ற இந்திய அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜி.மாசிலாமணி, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், குறிப்பாக, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் என்எல்சி பெரும் பங்காற்றி வருவதை குறிப்பிட்டு பேசினார்.
  விழாவுக்கு தலைமை வகித்த என்எல்சி இந்தியா தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பேசுகையில், பொதுத் துறை நிறுவனங்களின் நிதி ஆதாரம் அனைத்தும் மக்களின் பணம் என்பதால், அதனை செலவிடும்போது, மிகுந்த கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், நிறுவனத்தின் செலவில் பெரும்பகுதி ஒப்பந்தத் துறை மூலம் வழங்கப்படுவதால், அத்துறை குறித்த நுணுக்கங்களை அறிந்துகொள்ள இக்கருத்தரங்கு பயன்பட்டது. இதன்மூலம் அதிகாரிகள் பெற்ற அனுபவங்களை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.
  கருத்தரங்கில் மின்னணு வடிவிலான விழா மலர், அனல்மின் நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த கையேடு ஆகியவை வெளியிடப்பட்டன.
  விழாவில் என்எல்சி இயக்குநர்கள் சுபீர் தாஸ், விக்ரமன் மற்றும் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கின் அமைப்பாளரும், இயக்குநருமான பி.செல்வகுமார், மேம்பாட்டு மையத்தின் துணைப் பொது மேலாளர் எஸ்.சண்முக சுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
  முன்னதாக பொது மேலாளர் கே.சுப்பிரமணியன் வரவேற்க, ஒப்பந்தத் துறை பொது மேலாளர் எஸ்.ஆர்.சேகர் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai