சுடச்சுட

  

  குடும்ப அட்டையில் ஆதார் எண்: வீடு, வீடாக அதிகாரிகள் ஆய்வு

  By கடலூர்,  |   Published on : 19th December 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது தொடர்பாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமைஆய்வு செய்தனர்.
   தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை மூலமாக, பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டைகள் வைத்திருப்போருக்கு, இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டைகளை பலர் போலியாக வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் அட்டைகளாக வழங்குவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக குடும்ப அட்டையுடன், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வீட்டில் உள்ள வசதிகளின் விவரங்களும், விற்பனை முனை இயந்திரம் மூலமாக நியாயவிலைக் கடைகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள 7.06 லட்சம் குடும்ப அட்டைகளை வைத்திருப்போரில் இதுவரை 77 சதவீதத்தினர் தங்களது விவரங்களை இணைத்துள்ளனர்.
   இவ்வாறு இணைக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக வாக்குச் சாவடி அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள், வருவாய்த் துறையினர் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
   இப்பணிகளை, கடலூர் சாவடி பகுதியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தார். அப்போது, குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்ட விவரங்களை கேட்டறிந்தார்.
   இந்த ஆய்வின்போது, முன்னுரிமை உள்ளவர்கள், முன்னுரிமை அற்றவர்கள் என்ற வகையில் அட்டைகள் பிரிக்கப்படுகின்றன. இதில் முன்னுரிமை உள்ளவர்களுக்கே அரிசி மற்றும் அரசின் நலத் திட்டங்கள் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்காக இருவேறு இடங்களில் அட்டைகள் பயன்படுத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.தங்கவேலு, குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் கலாவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai