சுடச்சுட

  

  "ஸ்வைப்' இயந்திரம் பயன்பாட்டிலும் சிக்கல்: பொதுமக்கள் அவதி

  By கடலூர்,  |   Published on : 19th December 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "ஸ்வைப்' இயந்திரம் பயன்பாட்டில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
   கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, பொதுமக்கள் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்கள் தங்களிடமுள்ள பற்று மற்றும் கடன் அட்டைகள் மூலமாகவும், இணையதளத்தை பயன்படுத்தியும் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. ரொக்கமில்லா பணப் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையில், ரூ.340 கோடி மதிப்பிலான பரிசுத் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
   அதே நேரத்தில், கடலூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் "ஸ்வைப்' இயந்திரம் பயன்பாட்டில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. பொதுவாக பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் "ஸ்வைப்' இயந்திரங்களில் 95 சதவீதம் தனியார் வங்கிகளால் நிறுவப்பட்டுள்ளன.
   பொதுமக்கள் தாங்கள் வாங்கிய பொருளுக்கான தொகையை, அட்டைகள் மூலமாக செலுத்த முயன்றால், "தங்களுக்கான வரவு-செலவு வரம்பு நிறைவடைந்துவிட்டது. எனவே அட்டையைப் பயன்படுத்த முடியாது' என்று கூறுகிறார்கள். மேலும் சில நிறுவனங்கள், தங்களது நிரந்தர வாடிக்கையாளருக்கு மட்டுமே இத்தகைய வசதியை அளிக்கின்றன. சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் வாங்கும் மதிப்புக்குக் கூடுதலாக 2 சதவீதம் வரியுடன் சேர்த்து மட்டுமே அட்டையை அனுமதிக்க முடியும் என்றும் கூறி வருகின்றன.
   வங்கிகள் மற்றும் ஏடிஎம்களுக்குச் சென்று, போதிய பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் பொதுமக்கள், இதுபோன்ற அட்டை பயன்பாட்டில் நிலவும் குளறுபடியால் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி பொருள்களை வாங்கிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
   இதுகுறித்து வங்கித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஸ்வைப்' இயந்திரங்களை நிறுவியுள்ள தனியார் நிறுவனங்கள், தனித் தனியாக திட்டங்களை தயாரித்து வழங்குகின்றன. இதனால் எவ்வளவு பணத்துக்கு எவ்வளவு கமிஷன்? என்ற விவரம் தெரிய வருவதில்லை. ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மத்திய அரசு, இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும்,
   "ஸ்வைப்' இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க கூடுதலாக இயந்திரம் வழங்குவதோடு, கமிஷன் தொகையை கணிசமாகக் குறைத்திட வேண்டும் என்றார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai