சுடச்சுட

  

  எய்ட்ஸ் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்: அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

  By கடலூர்,  |   Published on : 20th December 2016 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு அலுவலர்கள் அனைவரும் எய்ட்ஸ் தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் அறிவுறுத்தினார்.
   உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று, எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைப்பேன், சம உரிமை அளிப்பேன் என உறுதி ஏற்றுக்கொண்டனர்.
   பின்னர் ஆட்சியர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச.1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின்கீழ் அரசுத் தலைமை மருத்துவமனைகள், வட்டாரத் தலைமை மருத்துவமனைகளில் 25 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் (நம்பிக்கை மையங்கள்) செயல்பட்டு வருகின்றன.
   மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 47 எளிதாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. மேலும், 2 ஏஆர்டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்களும், 4 சுகவாழ்வு மையங்களும், 8 இணைப்பு ஏஆர்டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்களும், 4 அரசு ரத்த வங்கிகளும், இலவச சட்ட உதவி மையமும், 2 தனியார் ரத்த வங்கிகளும், மக்கள் தொண்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
   மாவட்டத்தில் நடப்பாண்டில் ஆதரவற்ற மற்றும் எச்ஐவி, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 140 குழந்தைகளுக்கு ரூ.2.99 லட்சத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 168 குழந்தைகளுக்கு ரூ.3.85 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
   அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்பதோடு நின்றுவிடாமல், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களிடம் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
   மேலும், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் உயர்கல்வி பயிலும் 2 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 நிதி உதவிக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
   நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ்.மாதவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் முகமதுபாருக், மாவட்ட மேற்பார்வையாளர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai