சுடச்சுட

  

  உளுந்து கூடுதல் மகசூலுக்கு டி.ஏ.பி. கரைசல் அவசியம்: வேளாண் துறை யோசனை

  By கடலூர்,  |   Published on : 23rd December 2016 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உளுந்து பயிர் கூடுதல் மகசூல் பெற விவசாயிகள் டிஏபி கரைசலை தெளிக்க வேண்டும் என வேளாண்மைத் துறை யோசனை தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ரா.சு.மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு அடியுரம் மட்டும் போதாது. இலை வழியே 2 சதவீதம் டிஏபி உரம் தெளித்தல் மிகவும் அவசியம். டிஏபி உரம் தெளிப்பு செய்வதால் உளுந்து பயிரில் பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து காய் பிடிப்பு கூடுதலாகும். மேலும், காய்களில் உள்ள மணிகள் அனைத்தும் நன்கு முற்றி, மிகுந்த புரதச் சத்துடனும், எடை அதிகமாகவும் இருக்கும். இதனால் உளுந்து மகசூல் அதிகரித்து, விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ வீதம் டிஏபி உரத்தினை, தெளிப்பு செய்வதற்கு முந்தைய நாள் 15 லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் ஊறவைத்த நீரின் தெளிவை மட்டும் நன்கு வடிகட்டி, 185 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். முதல் தெளிப்பானது உளுந்து விதைப்பு செய்த 25-ஆம் நாளும் (பூக்கும் தருணம்), அதிலிருந்து 15 நாள்கள் கழித்து (பிஞ்சு காய் பருவம்) 2-ஆவது தெளிப்பு செய்தல் வேண்டும்.
   இரண்டு சதம் டிஏபி கரைசலை தெளிக்கும்போது வயலில் ஈரப்பதம் இருக்க வேண்டும். டிஏபி அளவை அதிகரித்தல், நீரின் அளவை குறைத்தல் கூடாது. பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடனும் கலந்து தெளிக்கக் கூடாது. உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள், மேற்கூறிய முறைகளை கடைப்பிடித்து 2 சதம் டிஏபி கரைசலை தெளிப்பு செய்து உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெற்று உற்பத்தியை அதிகரித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பச்சைப் பயறுக்கும் இதே போல் டிஏபி கரைசலை தெளித்து கூடுதல் மகசூல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai