சுடச்சுட

  

  வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

  By கடலூர்,  |   Published on : 23rd December 2016 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.24.66 கோடியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
   மேற்கூறிய பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி வருவாய்த் திட்டத்தின் கீழ் ரூ.17.70 கோடியில் கடலூர் செம்மண்டலம் - பட்டாம்பாக்கம் இடையே 15.5 கி.மீ. தூரத்தில் மேற்கொள்ளப்படும் சுங்கச் சாலைப் பணியின் தற்போதைய நிலை குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணியின் தரத்தில் எவ்வித குறைபாடு இல்லாமலும், குறித்த நேரத்தில் முடிக்கவும் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.
   மேலும் அவர் கூறுகையில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.3 கோடியில் கோண்டூர், நத்தப்பட்டு ஆகிய இடங்களில் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து வடிகால் பணிகளும் முறையாக முடிக்கப்பட்டுள்ளதை உரிய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
   அதேபோல் குமராட்சியில் வெள்ளியங்கால் ஓடையின் குறுக்கே ரூ.2.50 கோடியிலும், பரங்கிப்பேட்டை பாசிமுத்தான் ஓடையின் குறுக்கே ரூ.1.46 கோடியிலும் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன், கடலூர் செயற்பொறியாளர் ஆர்.மலர்விழி, விருத்தாச்சலம் செயற்பொறியாளர் கே.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai