சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கடையில் ஏற்பட்ட தகராறில், பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டார்.
  பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் புதுகாலனியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி. இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (15), நெய்வேலி, 10-ஆவது வட்டத்தில் உள்ள என்எல்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
   வெள்ளிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைக்கு ஜெயப்பிரகாஷ் சென்றார். அங்கு, கடை உரிமையாளர் பழனியப்பனுக்கும், ஜெயப்பிரகாஷூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பழனியப்பன் கத்தியால் ஜெயப்பிரகாஷின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ஜெயப்பிரகாஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நெய்வேலி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.  தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸார் மாணவரின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான பழனியப்பனை தேடி வருகின்றனர்.
   அவரை உடனடியாகக் கைதுசெய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் மாணவரின் உறவினர்கள் அரசு மருத்துவமனை அருகே, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், சிலர் அப்பகுதியில் செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   சம்பவம் தொடர்பாக, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மாணவரின் உறவினர்களிடம் சார்-ஆட்சியர் வர்கீஸ் விசாரணை நடத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai