சுடச்சுட

  

  தமிழகத்தில் டிச.28-ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றபோதிலும், பெரிய அளவில் மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.
  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடந்த ஆண்டு வெப்ப மண்டல அலைகள் இருந்ததால் கனமழை பெய்தது. தமிழகத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 44 சதவீதம் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 16 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது.
  பொதுவாக அதிக மழை பெய்ய வேண்டுமெனில் தாழ்வுநிலை உருவாக வேண்டும். கடந்த ஆண்டு வடகிழக்கு காற்று வேகமாக வீசியதால் அதிக மழை பெய்தது. அதேபோல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்ப மண்டல அலைகள் இருந்தால் நல்ல மழை பெய்யும்.
  தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய அளவில் மழை இருக்காது. தற்போது வானம் தெளிவாக இருப்பதால் பனிப் பொழிவு அதிகமாக உள்ளது. அதேபோல் கோடைக் காலத்தில் வானம் தெளிவாக இருந்தால் வெப்பம் அதிகமாக இருக்கும். பணி ஓய்வுக்குப் பின், பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று பேரிடர் மேலாண்மை, பருவமழை, நிலநடுக்கம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றி வருகிறேன். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் வானிலை, பேரிடர் குறித்த பாடங்களைக் கொண்டு வர வேண்டும் என்றார். பேட்டியின்போது விவசாய சங்கத் தலைவர்கள் ஏ.பி.ரவீந்திரன், சஞ்சீவி ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai