சுடச்சுட

  

  தொடரும் பணத் தட்டுப்பாடு: கிறிஸ்துமஸ் பொருள்கள் விற்பனை மந்தம்

  By DIN  |   Published on : 25th December 2016 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணத் தட்டுப்பாடு பிரச்னை தொடர்வதால், கிறிஸ்துமஸ் பொருள்கள் விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
  ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் தேவாலயங்களில் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்படும். கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் நட்சத்திர (ஸ்டார்) வடிவ அலங்காரப் பொருளை தொங்கவிடுவர். வாழ்த்து அட்டைகளும் பரிமாறப்படும்.
  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே பேன்சி, ஸ்டேஷனரி கடைகளில் வண்ண அலங்கார விளக்குகள், குடில்கள், ஸ்டார் பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டன.
  ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை சூடுபிடிக்கவில்லை என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
  இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் கடலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொருள்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
  ஆனால், நிகழாண்டில் இயற்கை சீற்ற பாதிப்பு இல்லாததால் கிறிஸ்துமஸ் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் பணத்தட்டுப்பாடு தொடர்கிறது.
  புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுக்கள் வங்கிகளில் விநியோகம் செய்யப்பட்டபோதும், அது மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார், அலங்கார மின் விளக்குகள் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது. பணப் பிரச்னையால், பண்டிகைக் கொண்டாட்டங்களின் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து வருகிறது என்றனர்.
  கேக் விற்பனையிலும் சரிவு: கிறிஸ்துமஸ் பண்டிகையில், கேக் முக்கிய இடம் பெறுகிறது. இதையொட்டி பேக்கரி கடைகளில் கேக் தயாரிப்புப் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  இருந்தபோதும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கேக் விற்பனை குறைவாகவே உள்ளதாக பேக்கரி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai