சுடச்சுட

  

  சிதம்பரம், புவனகிரி தாலுகா பகுதிகளில் சுமார் 44 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல்பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன. இதுகுறித்து புவனகிரி எம்எல்ஏ துரை.கி.சரவணன் ஆய்வு செய்தார்.
  மேற்கூறிய தாலுகா பகுதிகளில் வீராணம் ஏரி நீர் மூலம் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு காவிரி, மேட்டூர், கல்லணை, கீழணைகளிலிருந்து போதிய தண்ணீர் திறந்துவிடப்படாததால், வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாய பாசனத்துக்கு திறந்துவிடப்படவில்லை. வடகிழக்குப் பருவ மழையும் விவசாயிகளுக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைத்தும், குளங்களில் தேங்கியிருந்த நீரை மோட்டார் மூலம் இறைத்தும், விவசாயப் பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும் தண்ணீர் போதவில்லை. மழையும் பொய்த்ததால், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
  இந்த நிலையில், சிதம்பரம் தாலுகாவில் சேதமுற்ற பயிர்களை துரை.கி.சரவணன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  பின்பு அவர் கூறுகையில், நேரடி நெல் விதைப்பு, நடவு செய்த வயல் என அனைத்திலும் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். வறட்சியால் இந்த ஆண்டு விவசாயம் பொய்த்துப்போனது.
  விவசாயிகள் கடன் பெற்று சாகுபடி செய்த சம்பா நெல்பயிர்கள் கருகியதால், கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி அவதிப்படுகின்றனர்.
  எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரைப் போக்க தமிழக அரசு குழு அமைத்து, நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும், வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும்
  என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai