சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
   கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது, கிறிஸ்து பிறப்பினை உணர்த்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.
   இதன்படி ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் மாவட்டம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
   மேலும் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைத்திருந்தனர். தேவாலயங்களுக்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
   கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை, ஆராதனை நடைபெற்றது. அதன்படி கடலூர் ஆற்காடு லுத்ரன் திருச்சபை, தூய.எபிபெனி சிஎஸ்ஐ ஆலயம், மஞ்சக்குப்பம் புனித.கார்மல் அன்னை ஆலயம், கம்மியம்பேட்டை சூசையப்பர் ஆலயம், கடலூர் முதுநகர் சிஎஸ்ஐ கிறிஸ்து
   நாதர் ஆலயம், செம்மண்டலம் பாவநாசர் ஆலயம், சொரக்கால்பட்டு தூய.யோவான் ஆலயம், அந்தோணியார் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
   விருத்தாசலம் பகுதியில் பாத்திமா அன்னை ஆலயம், வீரபாண்டியன் தெரி ஆற்காடு லுத்ரன் திருச்சபை, கோணான்குப்பம் புனித.பெரியநாயகி அன்னை ஆலயம், இருப்புக்குறிச்சி திருஇருதய ஆண்டவர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
   இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
   நெய்வேலி: இதேபோல்,நெய்வேலி வட்டம் 24, காணிக்கை அன்னை ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறப்பை சித்திரிக்கும் வகையில், நள்ளிரவு 12 மணிக்கு பங்குத் தந்தை ஆர்.ரட்சகர் குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு ஆசி வழங்கினார்.
   இதேபோல், நெய்வேலி வட்டம்-4 சூசையப்பர் ஆலயம், வட்டம்-20 உலக ரட்சகர் ஆலயம், வட்டம்-11 தென்னிந்திய திருச்சபை ஆலயம், வட்டம்-3, 19, 28-இல் உள்ள ஆற்காடு லூத்ரன் திருச்சபை ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
   நிகழ்ச்சியில், புனித பால் பள்ளி முதல்வர் அருள்தந்தை நிர்மல்ராஜ், புனித ஆந்தோனியார் பள்ளி முதல்வர் அருள்தந்தை ஆரோக்கிய ஆனந்த ராஜ், நகரிய உதவிப் பங்குப் பணியாளர்கள் அருள்தந்தை பிலவேந்திரன், அருள்தந்தை ஜான் பவுல் ராஜ், புனித பால் பள்ளி துணை முதல்வர் அருள்தந்தை ஆல்வின் அன்பரசு ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
   பண்ருட்டி: பண்ருட்டி ஏ.எல்.சி. திருச்சபை, ஏ.ஜி. சபை, பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் மற்றும் வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள திருச் சபைகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
   கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் இயேசு பிறப்பை சித்திரிக்கும் குடில்கள் அமைத்திருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai